கோவை:''காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாயிலாக தமிழர்களுக்கும், தமிழுக்கும் மிகப்பெரிய பெருமையை மத்திய அரசு தேடிக்கொடுத்துள்ளது,'' என, நிகழ்ச்சியில் பங்கேற்ற, 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தெரிவித்தார்.
காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள தொப்புள்கொடி உறவை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு, நவ., 17ல் துவங்கி டிச., 16 வரை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற, கோவை 'சிறுதுளி' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:
காசி நகர் முழுக்க தமிழ் மணம் வீசியது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ். தமிழ் பேசுபவர்களை பார்க்கும் வட இந்தியர்கள், 'வணக்கம் காசி' என்று புன்முறுவலுடன் இருகரம் கூப்பி வரவேற்றனர்.
காசி விஸ்வநாதர் கோவிலில் நடக்கும் சப்த ரிஷி பூஜைக்கான அனைத்து பொருட்களும் அன்று முதல் இன்றளவும் நகரத்தார் சத்திரத்தில் இருந்தே எடுத்துச் செல்லப்படுகிறது.
பாரம்பரியத்தையும், பழமையையும், தொன்மையையும் மறவாமல் இன்றளவும் காசி விஸ்வநாதர் கோவிலில் தமிழகத்தை சேர்ந்த நகரத்தார்களுக்கு முதலுரிமையும், முதல் அங்கீகாரமும் கோவில் நிர்வாகத்தால் வழங்கப்படுவது, தமிழர்களுக்கு பெருமை அளிக்கிறது.
அங்கு நடந்த வர்த்தக பிரிவு நிகழ்ச்சியில் பங்கேற்று இயற்கை மற்றும் சூழலை பற்றியும் அதை பாதுகாப்பது குறித்தும் பேசினேன்.
அப்போது, 'இயற்கை வழங்கும் காற்றை நாம் சுவாசிக்கிறோம். இயற்கை கொடுக்கும் தண்ணீரை குடிக்கிறோம். நாம் அதற்கு செய்யும் கைமாறு என்ன வென்றால், அவற்றை மாசு படாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல் சேர்க்க வேண்டும்' என்றேன்.
அதற்கு அரங்கில் பலத்த கைதட்டல்களை கொடுத்து ஆரவாரம் செய்தனர். 'எங்கள் ஊருக்கு வந்து உங்களது பணிகளை துவங்குங்கள்' என்று பார்வையாளர்கள் தமிழில் கூறினர்.
தொடர்ந்து கங்கை படித்துறை, சுப்ரமணியபாரதி இல்லம், சாரநாத், பிரயாக்ராஜ், அயோத்திக்கும் அங்குள்ள ராமர் கோவிலுக்கு சென்றோம்.
இந்நிகழ்ச்சியின் வாயிலாக, தமிழர்களுக்கும், தமிழுக்கும் மிகப்பெரிய பெருமையை மத்திய அரசு தேடிக்கொடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.