நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து எம்ப்ளாயிஸ் யூனியன் மற்றும் லேபர் யூனியன் இணைந்து கருப்பு பேட்ஜ் அணிந்து வாயிற் கூட்டம் நடத்தின.
பொதுச் செயலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். லேபர் யூனியன் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சுப்ரமணியன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இதுபற்றி பார்த்தசாரதி, ஜீவானந்தம் ஆகியோர் கூறுகையில், '2015ம் ஆண்டு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி, நடைமுறைபடுத்தினர். 2018ம் ஆண்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஊதியத்தை உயர்த்தி இருக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
நடப்பு ஆண்டு மறுபடியும் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டாவது முறையாக ஊதியத்தை உயர்த்த வேண்டும். அதையும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் 2015ம் ஆண்டு பேச்சுவார்த்தை ஒப்பந்தப்படியே சம்பளம் வாங்குகிறோம்.
கடுமையான விலைவாசி உயர்வால் குடும்பம் நடத்த சிரமப்படுகிறோம். ஆலையில் பணி பாதிக்காத வகையில் தினமும் வேலைக்கு செல்வதற்கு முன், ஆர்ப்பாட்டம் நடத்தி, பணிக்கு செல்கிறோம்.
இதுபற்றி கவலைபடாமல் நிர்வாகம் அமைதியாக உள்ளதால் கருப்பு பேட்ஜ் அணிந்து வாயில் கூட்டம் நடத்தினோம். தீர்வு கிடைக்காவிட்டால் தீவிர போராட்டம் நடத்த உள்ளோம்' என்றனர்.