திண்டுக்கல : ஆண்டுகள் கடந்தும் சீரமைக்கப்படாத வடிகால்கள், துார்வாரப்படாத சாக்கடைகள்,சேதமான பாதாள சாக்கடை மேன்ஹோல்கள்,எங்கும்திரியும் கொசுக்கள், கடித்து குதறும் நாய்கள், விபத்துக்கு வழி தரும் டிரான்ஸ்பார்மர் என திண்டுக்கல் மாநகராட்சி 21 வது வார்டில் மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.
இ.பி.காலனி,வடக்கு சவுராஷ்டிரா தெரு,தெற்கு சவுராஷ்டிரா தெரு,ஸ்கீம் ரோடு,மெங்கில்ஸ்ரோடு,என்.வி.ஜி.பி.தெரு,சவுராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்தவார்டில் திரும்பும் திசையெல்லாம் சுற்றித்திரியும் நாய்களால் பலரும் ரோட்டில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.அதோடு மட்டுமின்றி பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சேதமான சாக்கடை மேன் ஹோலால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.
மழை நேரத்தில் சொல்ல முடியாத அளவிற்கு மழைநீர் கழிவு நீருடன் சேர்ந்து குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை பாடாய்படுத்துகிறது.இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கடிக்கும் கொசுக்களால் உடலில் தடிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள்,பெரியவர்களும் பாதிக்கின்றனர்.
சாக்கடைகள் முறையாக துார்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
ரோட்டோரங்களில் குப்பையை வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தெரு சந்திக்கும் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்துக்களில் சிக்கும் நிலையும் தொடர்கிறது.
புகார்கள் எத்தனை கொடுத்தாலும் இந்நிலைக்கு மாற்றம் ஏற்படவில்லை. அதிகாரிகள் எப்போதாவது வருகிறார்கள் அதோடு சரி. அதன் பின் இந்த பக்கமே திரும்பி பார்ப்பதில்லை.சாக்கடை வடிகால்களில் மாதக்கணக்கில் தேங்கும்மழை நீரால் கொசு உற்பத்தி ஜோராக நடக்கிறது என்கின்றனர் வார்டு மக்கள்.