திருப்புத்துார் : திருப்புத்துார்-மதுரை ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
நகரின் முதன்மை ரோடாக மதுரை ரோடு உள்ளது. இருபுறமும் வணிக நிறுவனங்கள், வங்கிகள் உள்ளதால் மக்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதி. இந்த ரோடு சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்டது.
இருப்பினும் அதிகரித்துள்ள வாகனங்களின் எண்ணிக்கையாலும், ரோட்டின் இருபுறமும் டூ வீலர்கள், 4 சக்கர வாகனங்கள் நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் உருவாகியுள்ளது. அத்துடன் நடைபாதைக் கடைகள், விளம்பர பதாகைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
ஆம்புலன்ஸ் செல்வது கூட பாதிக்கப்படுகிறது. குறுக்கு ரோடுகள் சந்திப்பாலும், டூவீலர்களின் வேகத்தாலும் விபத்துக்கள் தொடர்கின்றன. ரோட்டைக் கடந்து செல்ல வயதானவர்கள், சிறுவர்கள் மட்டுமின்றி அனைத்து பாதசாரிகளுமே தடுமாறும் நிலை. தற்போது இதை குறைக்க நெடுஞ்சாலைத்துறையினர் குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடை, பாதசாரிகள்கடக்கும் பாதையை அடையாளமிட்டுள்ளனர்.
மேலும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
மதுரை ரோட்டில் பிளாட்பார்ம் வசதி, நான்கு சக்கர வாகனத்திற்கு 'நோ பார்க்கிங்', ரோட்டில் தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வாணியன் கோயில் விலக்கு ரோடுக்கு அருகில் எச்சரிக்கை பலகை, மாற்று ரோடுகளை கண்டறிந்து மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.