திருப்பூர்: மாற்று சந்தைகளில் கால்பதித்த வங்கதேசம், கடந்த ஐந்து மாதங்களில், 1.47 லட்சம் கோடி ரூபாய்க்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போர் சூழலால், சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது. வளர்ந்த நாடுகளிலும், மக்களின் ஆடம்பர செலவுகள் குறைந்து விட்டன. இந்த இக்கட்டான நிலையிலும், பங்களாதேஷின் ஏற்றுமதி வர்த்தகம், கடந்த ஐந்து மாதங்களில், 1.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, அதேகாலகட்டத்தில், 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே நடந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகள் வரிசையில், இந்திய வர்த்தகர்களும், வங்கதேச வாடிக்கையாளராக மாறி வருகின்றனர்.
கடந்த நவ., மாதத்தில் மட்டும், 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பின்னலாடை, 15 ஆயிரத்து, 920 கோடி ரூபாய்க்கு 'ஓவன்' ஆயத்த ஆடைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, 2021ம் ஆண்டில், ஜூலை முதல் நவ., வரையிலான ஐந்து மாதங்களில் இருந்ததை காட்டிலும், இந்த ஐந்து மாதங்களில், 15.61 சதவீதம் அளவுக்கு வர்த்தகம் வளர்ச்சி பெற்றுள்ளதால், வங்கதேச ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
புதிய சந்தை
இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் அமைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது:
வங்கதேச நாட்டின் ஏற்றுமதி வருவாயில், ஆயத்த ஆடையின் பங்களிப்பு மட்டும், 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறுகிய கால இலக்காக, 4 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி, 2030ல், எட்டு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதிக்கு இலக்கு நிர்ணயித்து, சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து நீங்கலாக, புதிய வர்த்தக சந்தைகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர்.
ஜப்பான், கொரியா, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற புதிய சந்தைகளில் கால்பதித்துள்ளனர். நம் நாட்டிலும், புதிய சந்தைகளை உருவாக்குவது, தற்போதுள்ள சந்தைகளை வலுப்படுத்துவது, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி, செயற்கை நுாலிழை ஆயத்த ஆடை உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
அதுபோல, 'மித்ரா' பார்க்கில் உருவாகும் ஆயத்த ஆடை கட்டமைப்புகள், உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் வாயிலாக, போட்டித்திறன் மற்றும் மூலப்பொருள் உற்பத்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால், இந்தியாவும் உலக சந்தைகளில் தன் பங்களிப்பை வலுவானதாக மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.