சூலுார் : கோவையில் எஸ்.ஐ., யாக நடித்து வாகன தணிக்கை செய்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் உடையணிந்த நபர் மீது சந்தேகம் அடைந்த சசிகுமார், கருமத்தம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். அங்கு சென்ற போலீசார், அந்நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
அதில், விருதுநகர் திம்மன்பட்டியை சேர்ந்த செல்வம்,29, என்பது தெரிந்தது. கருமத்தம்பட்டியில் தங்கி, ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்ததும், எஸ்.ஐ., போல் போலியாக சீருடை அணிந்து, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், வாகன தணிக்கை செய்வது போல் ஏமாற்றி பணம் வசூல் செய்ததும் தெரிந்தது.
எஸ்.ஐ., எனக்கூறி, பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது.
இதையடுத்து, செல்வத்தை கைது செய்த போலீசார், வழக்குப்பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.