கோவை : கட்டட வரைபட அனுமதி கேட்போரிடம் கொடி நாள் நிதி வசூலிக்க, உதவி பொறியாளர்களுக்கு, கோவை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களிடம் பணம் வசூலித்து, படை வீரர் நலனுக்காக வழங்கப்படும். தற்போது நாட்டுக்காக போரிட்டு உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது.
கொடி நாள் வசூலிக்க, கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு அரசு துறைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையை திரட்ட, கட்டட வரைபட அனுமதி பெற விண்ணப்பம் செய்வோரிடம் இருந்து பணம் வசூலித்துக் கொடுக்க, பதிவு பெற்ற பொறியாளர்களுக்கு, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
பதிவு பெற்ற பொறியாளர்களின் மொபைல் போனுக்கு, நகரமைப்பு பிரிவினர் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், 'நவ., 1ல் இருந்து கட்டட அனுமதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து, 2,000 சதுரடி வரை ரூ.500, அதற்கு மேல் ரூ.1,000, மனைப்பிரிவு ஒரு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் கொடி நாள் நிதி வசூலித்துக் கொடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.
இதேபோல், கட்டட அனுமதிக்கு கட்டணம் நிர்ணயம் செய்யும்போது, கொடி நாள் நிதி வசூலிக்க, இளநிலை, உதவி பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கட்டாய வசூலாக, கட்டணம் நிர்ணயித்து இருப்பதால், மாநகராட்சி பதிவு பெற்ற பொறியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.