கோவை : இரு மாதங்களாக ஓய்வூதியம் வழங்காததால், கோவையில் காலி தட்டுடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து விவாதிக்க, கோவை நல்லாயன் பள்ளியில், மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது; மாவட்ட செயலாளர் வெங்கட சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வீரபத்திரன் வரவேற்றார். கோவை மாவட்டத்தில் இரு மாதங்களாக ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காதது தொடர்பாக, கலெக்டரிடம் நேரில் முறையிட்ட பின்பும் இன்னும் வழங்காதது தொடர்பாக பேசப்பட்டது.
இதை கண்டித்து, ஓய்வூதியர்களை திரட்டி, கோவை கலெக்டர் அலுவலகம் முன் காலி தட்டுகளுடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதுகுறித்து, கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கடிதம் வழங்கப்பட்டது. சென்னையில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், கோவையில் இருந்து, 200 பேர் பங்கேற்பதென தீர்மானிக்கப்பட்டது.
மாநில செயற்குழு உறுப்பினர் இன்னாசிமுத்து, மாநில பொறுப்பாளர் ஆனந்தவள்ளி, மாவட்ட பொருளாளர் வீரம்மாள், துணை தலைவர் வெங்கிட்டான் உட்பட பலர் பங்கேற்றனர்.