இந்நிலையில் கடந்த, 1ம் தேதி திராவிடர் விடுதலை கழகம் என்ற அமைப்பு சார்பில், 'மாநகராட்சி அலுவலகமான, அரசு அலுவலக வளாகத்தில் கோவில், வழிபாடு, யாகசாலை பூஜை செய்யக்கூடாது; அதை இடித்து அகற்றுவோம்' என கூறி, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில், 12 பேர் கூடினர்.
இதற்கான அறிவிப்பு வந்தது முதல், பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், மாநகராட்சி மற்றும் கோவில் வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
திராவிடர் விடுதலை கழகம் என்ற அந்த அமைப்பினர் கடப்பாரை, மண் வெட்டியுடன் வந்து, யாகசாலையை அகற்றுவோம் என கோஷம் எழுப்பியதும் கைது செய்யப்பட்டனர். எனினும், அவர்களின் செயல், மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ., பிரசார அணி முன்னாள் மாநில தலைவர் சரவணன் கூறியதாவது: மாநகராட்சி வளாக விநாயகர் கோவில் பல ஆண்டுக்கு முன் கட்டியது; கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் கூட சீரமைக்கப்பட்டது.
இப்போது அந்த கோவிலை எதிர்ப்போம் என்பவர்கள், அப்போது எங்கு போயினர்? தற்போது புனரமைப்பு செய்து, கும்பாபிஷேக பூஜை நடக்கும்போது, இடிப்பேன் என்பது தவறானது.
முதல்வர் ஸ்டாலினின் மோசமான ஆட்சியை பற்றி மக்கள் விமர்சிக்காமல் தடுக்க, அவருக்காக, 'திராவிடர்' என்ற பெயரிலான அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபடுகின்றன.
அரசின், 12.66 ஏக்கரை சி.எஸ்.ஐ., நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளது என நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்தது. அவ்விடத்துக்கு கடப்பாரை, மண் வெட்டியுடன் செல்ல வேண்டியது தானே... ஆனால் அவ்வாறு செல்ல மாட்டார்கள்.
தி.மு.க.,வினர் நேரடியாக எதிர்த்து பேசினால், ஓட்டு பறிபோகும் என்பதால், இதுபோன்ற கட்சிகளை துாண்டி விடுகின்றனர். அதேநேரம், முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா, பல கோவில்களில் யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபடுகிறார்.
அவரை கோவிலுக்கு செல்லக்கூடாது என யாரும் வலியுறுத்துவதில்லை. கோவில்களுக்கு வரும் வருவாயையும், கோவில் நிலங்களையும் அரசு பயன்படுத்தும்போது, அரசு நிலத்தில் கோவில் அமைவதில் என்ன தவறு உள்ளது?
இவ்வாறு கூறினார்.
ஹிந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன் கூறியதாவது:
கடவுள் இல்லை என கூறுவோர், எல்லா கடவுளையும் எதிர்க்கட்டும். ஹிந்து கடவுளை மட்டும் எதிர்ப்பது தவறானது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம், பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம். அதை இடிக்க வலியுறுத்தட்டும்.
கோவில் இடம், சொத்து, பணத்தை அரசு பயன்படுத்தும்போது, அரசு நிலங்களில் கோவில் கட்டுவது தவறில்லை. பல கோவில்களுக்கு வரும் வருமானத்தை அரசு எடுத்து செலவிடுகிறது; அறநிலையத்துறையை நடத்துகிறது.
ஹிந்து கோவில்களை மட்டுமே அறநிலையத்துறையின் கீழ் நடத்தும்போது, அரசு நிலங்களில் கோவில் கட்டுவது, பூஜைகள் செய்வது தவறில்லை. அப்படி கூறினால், அறநிலையத்துறையை அகற்றி, கோவில்களை விட்டு அரசு வெளியேறட்டும்.
கோவில்களை ஆன்மிக, இறைவழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களிடம் ஒப்படைக்கட்டும். கோவில்களை இடிக்க வருவேன் என்பது, தங்களுக்கு எதிரான செயல்பாடாகவே அரசு பார்க்க வேண்டும்.
அரசு அலுவலக வளாகத்தில் கோவிலுக்கான யாகசாலை பூஜை செய்வது தவறு என்றால், அரசு சார்பில் ஹஜ் யாத்திரை, ஜெருசலேம் பயணத்துக்கு நிதியுதவி வழங்குவதும் தவறு தானே; அதையும் இவர்கள் எதிர்க்கட்டும்.
இவ்வாறு கூறினார்.
திராவிடர் விடுதலை கழகம் என்ற அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்தினசாமி கூறியதாவது:
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கோவில், வழிபாடு செய்வதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அரசு அலுவலக வளாகத்தில் அத்தனை மதத்துக்கும் கோவில்கள் உள்ளதா என பார்க்க வேண்டும்.
சி.எஸ்.ஐ., நிர்வாகத்தில் உள்ள இடத்தில், சில ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு என நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை வரவேற்கிறோம்; அதை நாங்கள் ஏற்கவில்லை. அதுபோல, அரசு வளாகத்தில் கோவில்கள், பூஜைகள், யாக சாலை அமைப்பதையும் எதிர்க்கிறோம்.
இவ்வாறு கூறினார்.