கோவை : போலி வரைபடத்துக்கு, கட்டட வரைபட அனுமதி அளித்த அதிகாரிகள் மூவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தியுள்ள கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப், விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' கொடுத்துள்ளார்.
கோப்புகளை ஆய்வு செய்த அவர், வரைபட அனுமதி வழங்கிய காலகட்டத்தில், நகரமைப்பு அலுவலராக இருந்த சசிப்பிரியா (தற்போது, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவு நிர்வாக பொறியாளர்), உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, உதவி நிர்வாக பொறியாளர் புவனேஸ்வரிக்கு, மாநகராட்சி பணியாளர் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல்முறையீடு) விதிகள் 8(2)-ன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.
அதில், மூலப்பத்திரங்களை பரிசீலிக்காமல், நகர ஊரமைப்புத்துறை வரைபடங்களை சரிபார்க்காமல், கட்டட அனுமதி வழங்க பரிந்துரை செய்திருப்பதையும், போலி வரைபடம் தயாரித்து சமர்ப்பித்திருப்பதை கண்டறியாமல், கடமையில் கவனக்குறைவாக இருந்ததையும், கமிஷனர் பிரதாப் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
நோட்டீஸ் கிடைத்த, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க அறிவுறுத்தியுள்ள கமிஷனர், 1973ம் வருடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர்களின் நடத்தை விதிகள் 18-ன் கீழ், இதுசம்பந்தமாக அரசியல் செல்வாக்கையோ அல்லது வேறு வெளிச்செல்வாக்கையோ அல்லது உயரதிகாரியின் சிபாரிசையோ நாடக்கூடாது; அவ்வாறு நாடினால், நடத்தை விதி - 18க்கு மாறுபட்டு நடந்த குற்றத்துக்காக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருக்கிறார். இந்த நோட்டீஸ், மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.