கோவை : ''நிதியாண்டு முடிவதற்குள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.350 கோடி கடனுதவி வழங்கப்படும்,'' என, தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
மகளிர் சுய உதவி குழுவினருக்கு, நிர்ணயித்துள்ள இலக்கை விட கூடுதலாக கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில், 174 பயனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், 786 புதிய சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு, சுழல் நிதியாக ரூ.1.18 கோடி, சமுதாய முதலீட்டு நிதியாக, 116 குழுக்களுக்கு ரூ.1.08 கோடி வழங்கப்பட்டுள்ளது. 7,353 மகளிர் குழுக்களுக்கு ரூ.411.32 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியாண்டு முடிவதற்குள், மேலும் ரூ.350 கோடி கடன் வழங்கப்படும்.
இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
பின், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் மகளிர் குழுக்களுக்கு ரூ.4.53 கோடி கடனுதவியை வழங்கினார். வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கிய, கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் விசாலாட்சி, தீத்திபாளையம் ஊராட்சி தலைவர் கந்தசாமி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அரசின் முதன்மை செயலர் அமுதா, ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது, வாழ்வாதார இயக்க மேலாண் இயக்குனர் திவ்யதர்ஷினி, கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சவுமியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.