கோவை:கோவை ராமநாதபுரத்தில், அபினிடி எல்டர் கேர் மையம் செயல்பட்டு வருகிறது. மையத்தின் புதிய கிளை, ரத்தினபுரி டாடாபாத் வேலம்மாள் நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய கிளை துவக்க விழா மைய வளாகத்தில் நேற்று நடந்தது.
மருத்துவமனை இயக்குனர் லதா கூறியதாவது:
என்ன நோக்கத்துக்காக மையம் துவங்கப்பட்டதோ, அது நிறைவேறியுள்ளது. முதியோர் நல மருத்துவம் மட்டுமின்றி, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்ல முடியாத மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும், மையத்தில் சேவை வழங்கப்படுகிறது.
செவிலிய சேவைகள் முதியவர்களுக்கும் வழங்கப்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவ வசதி தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சாதாரண கட்டணத்தில் சேவை வழங்கப்படுவதால், பொதுமக்கள் விரும்புகின்றனர். ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட கவனிப்பு வழங்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னதாக, புதிய கிளையை அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்க கூட்டமைப்பு அமைப்பு செயலாளர் நந்து, கோவை கேர் நிறுவனர் கர்னல் ஸ்ரீதரன் துவக்கி வைத்தனர்.
கே.ஜி.எம்., மருத்துவமனை தலைவர் தங்கவேலு, ராயல் கேர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் சிவகுமார், மருத்துவமனை இயக்குனர்கள் வினோத்குமார், பிரபாவதி, ஆலோசகர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.