திருப்பூர்:வடகிழக்கு பருவ மழை துவங்கியதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் முதல் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பரவலாக, தொடர் மழை பெய்தது. நீர்ப்பிடிப்புகளில் பெய்த மழையால், அமராவதி, திருமூர்த்தி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கடந்த இரு வாரங்களாக, மழை பெய்யவில்லை. திருப்பூர் நகர பகுதியில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது வெயில் தலைகாட்டி, உஷ்ணத்தை அதிகரித்தது.
இந்நிலையில், மதியம், 2:00 மணி அளவில் மழை பெய்தது. சில இடங்களில் கன மழை பெய்தது. ஒரு மணிநேரத்துக்கும் மேல் மழை நீடித்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதித்தது.
திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் பெறும் தொழிலாளர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் ஷாப்பிங் செய்வது வழக்கம்.
மழை காரணமாக நேற்று மதியத்துக்குப்பின், கடை வீதிகளில் மக்கள் வருகை குறைந்துகாணப்பட்டது. இதனால், வர்த்தகர்கள் கவலை அடைந்தனர். மழையால், வெப்பம் தணிந்து, குளிர் பரவியது.