கோவை:கிராம உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான எழுத்துத்தேர்வு, கோவை மாவட்டத்தில் 9 மையங்களில் நேற்று நடந்தது.
தமிழகம் முழுவதும், 2,748 கிராம உதவியாளர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, மாநில அரசு வெளியிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட உதவியாளர்கள், தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கென ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று, அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தில் மட்டும், 3,508 பேர் விண்ணப்பம் அளித்திருந்தனர்.
இவர்களுக்கான எழுத்துத்தேர்வு, நேற்று மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்தது. 2,648 பேர் பங்கேற்றனர். 860 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், பேரூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலையில் தலா ஒரு இடத்திலும், கோவை வடக்கு தாலுகாவில் மட்டும், இரு இடங்களிலும் எழுத்துத் தேர்வு நடந்தது.
மாவட்ட கலெக்டர் சமீரன் தேர்வை மேற்பார்வையிட்டார்.
அந்தந்த துணை கலெக்டர்கள், தாசில்தார்கள் முன்னிலையில், தேர்வு நடத்தப்பட்டது. இறுதி முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.