திருப்பூர்:விவசாயிகளும், 'ஜின்னிங்' ஆலைகளும், கூடுதல் விலையை எதிர்பார்ப்பதால், பரபரப்பாக இருக்க வேண்டிய பருத்தி சீசனில், வேகம் குறைந்துள்ளதாக நுாற்பாலைகள் கவலை அடைந்துள்ளன.
மிகத்தரமான பஞ்சு உற்பத்தி செய்வதால், சர்வதேச அளவில், இந்திய பருத்திக்கு, மதிப்பு அதிகம். நம் நாட்டில், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களே, பருத்தி வர்த்தகத்தில், முன்னணியில் திகழ்கின்றன.
நடப்பு பருத்தி சீசனில், கடந்த அக்., மாதம் 9.10 லட்சம் பேல் (ஒரு பேல் என்பது, 170 கிலோ) பஞ்சு சந்தைக்கு வந்தது; கடந்த மாதம், மூன்று மடங்கு அதிகரித்து, 27.03 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது. இருப்பினும், தினசரி வரத்து 55 சதவீதம் அளவுக்கு குறைந்து போயுள்ளதாக, நுாற்பாலைகள் தெரிவிக்கின்றன.
தினசரி வரத்து, குறைந்தபட்சம், 73 ஆயிரம் பேல்களாகவும், அதிபட்சம், 1.28 லட்சம் பேல்களாகவும் இருந்தது. தரமான பஞ்சு, ஒரு கேண்டி(356 கிலோ) 68 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
குஜராத் சட்டசபை தேர்தல் காரணமாகவும், பருத்தி வரத்து குறைந்திருக்கலாம்; தேர்தலுக்கு பிறகு, தேர்தல் நடத்தை விதிமுறை தளர்த்தப்பட்டதும், பருத்தி வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்க விழைவோரை, மத்திய அரசு, பாரபட்ச மின்றி கட்டுப்படுத்த வேண்டும் என, தொழில்துறையினர் வலியுறுத்துகின்றனர்.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''டிச., மாதத்தில், பருத்தி சீசனில், தினமும் இரண்டு லட்சம் பேல் விற்பனைக்கு வரும். விவசாயிகள், கூடுதல் விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். விவசாயிகளும், 'ஜின்னிங்' மில்களும் பருத்தியை விற்பனைக்கு கொண்டுவர தயங்குகின்றனர். விவசாயிகளுக்கு, அரசு நிர்ணயித்ததை காட்டிலும் கூடுதல் விலை கிடைக்கிறது.
பருத்தி இறக்குமதிக்கான வரிவிலக்கு சலுகையை மேலும் சில மாதங்கள் நீட்டித்தால், பஞ்சு பதுக்கல் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. மத்திய அரசு, பருத்தி மார்க்கெட் இயக்கத்தை ஆராய்ந்து பார்த்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.