கடலுார : அவ்வையார் விருது பெற, வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கடலுார் கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 2023ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தன்று அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 1 லட்சத்திற்கான காசோலையுடன் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழக அரசின் (http://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் வரும் 10ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணிபுரிபவர்களாக இருத்தல் வேண்டும்.
இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.