சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த கரிவெட்டி கிராமத்தில் நிலங்களை அளவீடு செய்ய வந்த என்.எல்.சி. மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளை கிராமத்திற்குள் வர விடாமல் தடுத்து நிறுத்தி, கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள என்.எல்.சி., இந்தியா நிறுவனம், சுரங்க விரிவாக்கத்திற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி, வி.சாத்தப்பாடி, ஊ.ஆதனுார் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒரே கருத்தாக, நிலங்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும், தங்களது வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் தர வேண்டும், நிரந்தர வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளுடன், பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
கிராம மக்களின் கோபத்தை துாண்டும் வகையில், என்.எல்.சி., அதிகாரிகளும், மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளும் முன்னறிவிப்பு இல்லாமல், நில ஆர்ஜிதத்திற்காக சம்பந்தப்பட்ட கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதை கண்டித்து மக்கள் போர்க்கொடி உயர்த்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், மாவட்ட வருவாய் அதிகாரி பூவராகவன், நில எடுப்புக்கான மாவட்ட வருவாய் அதிகாரி கிருஷ்ணன் மற்றும் நில எடுப்பு தாசில்தார்கள், நேற்று மதியம் 12:00 மணியளவில் கரிவெட்டி கிராமத்தில் அளவீடு செய்வதற்கு முன்னறிவிப்பு இல்லாமல் வந்தனர்.
இதையறிந்த கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஊரின் எல்லையில் திரண்டனர். அதிகாரிகள் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி, கிராமத்திற்குள் செல்ல விடாமல் சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ரூபன்குமார், புவனகிரி தாசில்தார் ரம்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, அதிகாரிகளை சிறைபிடித்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் கிராம மக்கள், 'கடந்த காலங்களில் நிலங்களை கையகப்படுத்திய என்.எல்.சி., நிறுவனம், நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்குகூட வேலை தரவில்லை. மாற்று குடியிருப்பும், வாழ்வாதாரமும் இதுநாள் வரை என்.எல்.சி., நிறுவனம் ஏற்படுத்தி தரவில்லை.
மீண்டும் நிலங்களை கையகப்படுத்த முயற்சித்து மக்களை துன்புறுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 கோடி, வீட்டுமனை பட்டாவுடன் 10 சென்ட், நிரந்தர வேலை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே நிலம் கொடுக்கப்படும்' என, தெரிவித்தனர்.
பின், டி.எஸ்.பி., ரூபன்குமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சிறைபிடித்த அதிகாரிகளை கிராம மக்கள் விடுவித்து, மதியம் 1:15 மணியளவில் திருப்பி அனுப்பினர்.