பி.முட்லுாரில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை 40 கி.மீ., தொலைவிற்கு வெள்ளாற்றங்கரையின் இரு பக்கமும் வயல்வெளியாக மாற்றி சாகுபடி செய்து வருகின்றனர். பலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்களையும் எழுப்பி உள்ளனர்.
ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து பொதுப்பணி, வருவாய் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் குறுக்கீடுகளை கண்டு அச்சமடைகின்றனர். அரசு முறைப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றினால், குறைந்தது 150 ஏக்கருக்கும் மேல் இரு திசைகளிலும் அரசு நிலத்தை மீட்கலாம்.
இதன் காரணமாக, ஆற்றின் பரப்பளவு விரிவடையும்.
மழைக்காலங்களில் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். எனவே, முறைப்படி அளவீடு செய்து ஆக்கிரப்புகளை அகற்றுவதற்கு, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனித ஆக்கிரமிப்புகள் மட்டுமல்லாமல், புவனகிரி பாலத்தில் இருந்து ஆற்றின் இரண்டு கரைகளும் துார்ந்து கருவை முட்புதர்கள் காடுபோல மண்டியுள்ளது.
இதனால், மழை காலங்களில் சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து வரும் தண்ணீர் வடியாமல் தேங்கி பாதிப்பு ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் மாசு படுகிறது.
எனவே, ஆக்கிரமிப்புகளையும், கருவை முட்புதர்களையும் அகற்றி, ஆற்றையும், நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என, புவனகிரி சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.