உத்திரமேரூர், : உத்திரமேரூரில், வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்குகிறது. பழமையான இந்த பத்திரபதிவு அலுவலகத்தின் கீழ் கடந்த ஆண்டுகளில், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளடங்கி இருந்தன.
இந்த அலுவலக கட்டடத்தின் உறுதி தன்மை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் கட்டடம் மிகவும் பழுதடைந்து கூரை உடைந்து மழைக்காலத்தில் நீர் சொட்டுகிறது.
இதனால், ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டு, தார்பாய் கொண்டு கூரை பகுதியை மூடி வைத்துள்ளனர். பத்திரபதிவில் பல நவீன தொழில்நுட்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அத்தனையும் இந்த பழுதடைந்த கட்டடத்திற்குள்ளே பதிவு செய்து வைக்கின்றனர்.
ஆபத்தான இக்கட்டடத்தின் உள்ளே மழைக்காலத்தில் செல்ல பொது மக்கள் அச்சப்படும் நிலை இருந்து வருகிறது.
எனவே, பொது மக்கள் நலன் மட்டுமின்றி, மதிப்புமிக்க ஆவணங்களை முறையாக பாதுகாக்கும் நோக்கில், உத்திரமேரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.