திருப்போரூர், : தமிழகத்தில், 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. கோவில்களில் அன்னதான திட்டம், தினசரி பிரசாதம் வழங்கும் திட்டம், பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
கும்பாபிஷேகம் நடக்காத கோவில்களை கண்டறிந்து, அந்த கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா நடத்தவும், அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், ஏழை, எளிய மக்களுக்கு, கோவில்களில் திருமணம் செய்து வைக்கும் திட்டத்தையும், தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கான செலவினத்தை கோவில் நிர்வாகமே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று தலா 20 ஆயிரம் ரூபாய் திட்ட செலவில், 5 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடந்தன.
ஒரு ஜோடிக்கு, திருமாங்கல்யம், புத்தாடை, திருமண விருந்து, பூ மாலைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லட்சுமிகாந்தபாரதிதாசன், செயல் அலுவலர் வெங்கடேசன் உட்பட, பலர் பங்கேற்று வாழ்த்தினர்.