காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பொது சுகாதாரத் துறை வாயிலாக குடிநீர் பரிசோதனை முழு வீச்சில் நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, பகுதிகளில் குடிநீர் சுத்தமாக இருக்கிறதா அந்த குடிநீரை மக்கள் குடித்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படாதா என்ற நோக்கத்தில் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது.
குடிநீர் மாதிரி
பொது சுகாதாரத் துறை சார்பில் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் இருந்து குடிநீர் மாதிரி எடுத்து கிண்டி கிங்ஸ் குடிநீர் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 274 ஊராட்சிகள், மூன்று பேரூராட்சிகள் உள்ளன.
அங்கு பணியாற்றும் பம்பு ஆப்பரேட்டர்கள் மூலம் அங்குள்ள ஆழ்துளை கிணறுகள், குடிநீர்மேல்நிலை தொட்டிகள், வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் என மூன்று விதமாக தண்ணீர் சேகரிக்கப்படுகிறது.
வழக்கமாக பொது மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை அடிக்கடி ஆய்வு செய்யப்படுகிறது.
சென்னை கிண்டி கிங்ஸ் குடிநீர் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்யப்படும் குடிநீர் நான்கு வகையாக பரிசோதனை செய்யப்படுகிறது.
வேதியல் பரிசோதனை, உயிரியல் பரிசோதனை, நுண்ணுயிர் பரிசோதனை, பவுதிக பரிசோதனை என நான்கு பிரிவாக பிரிக்கப்படுகிறது.
மேலும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் குளோரின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும், வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் எத்தனை சதவீதம் குளோரின் அளவு இருக்க வேண்டும் என விதி முறைகள் உள்ளன. அது குறித்த பரிசோதனை நடந்து வருகிறது.
குடிநீரினால் மக்கள் பாதிக்கப்படுவது தெரிய வந்தால் முக்கியம் கருதி அதன் ரிசல்ட் மூன்று நாட்களில் கிடைத்து விடும்.
வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் இந்த பரிசோதனை வழக்கமானது என்பதால் 25 நாட்களில் இதன் முடிவு வழங்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
குறைபாடுகள்
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொது சுகாதாரத் துறை சார்பில் குடிநீர் பரிசோதனை நடந்து வருகிறது. பரிசோதனையில் குறைபாடுகள் இருப்பது தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு தெரியப்படுத்தப்படும்.
பின் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்படும். சில இடங்களில் குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால் முதல் நிலையில் நாங்கள் கண்டு பிடித்து விடுவோம். அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சில நேரங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தால் கிங்ஸ் பரிசோதனை மையத்திற்கு தண்ணீர் அனுப்பி வைத்து அதில் என்ன குறைபாடு இருக்கிறது என கண்டு பிடித்து அதற்கான தீர்வு ஏற்படுத்தப்படும்.
குடிநீரால் பாதிக்கப்பட்ட பகுதி தொடர் கண்காணிப்பில் இருக்கும். அங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும் குடிநீர் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு மக்கள் அந்த குடிநீரை பயன்படுத்தலாம் என்று உறுதி செய்யப்படும்.
ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள சுகதாரா ஆய்வாளர் மற்றும் சுகாதார பணியாளர்கள் வாயிலாக அந்தந்த ஊராட்சி தலைவர் ஒத்துழைப்புடன் இந்த பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.