சென்னை : இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், அயனாவரத்தில் பேருந்து நிலையத்துடன் புதிய மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் வேகமெடுத்து உள்ளன.
சென்னையில் இரண்டாவது கட்டமாக நடக்கவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தில், அதிகபட்சமாக மாதவரம் - சிப்காட் தடத்தில், 26.7 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைகிறது.
மூலக்கடை, பெரம்பூர்,அயனாவரம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை, திருமயிலை, மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி, நாவலுார் வழியாக சிப்காட்டை இந்த மெட்ரோ ரயில் தடம் இணைக்கிறது.
இந்த தடத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள், பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. ராட்சத இயந்திரங்கள் மூலம், தினமும் சராசரியாக, 32 அடி துாரம் சுரங்கம்தோண்டும் பணிகள் நடக்கின்றன.
மற்றொருபுறம், சுரங்கம் தோண்டி மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், அயனாவரம் பேருந்து நிலையம் அருகே, புதிய மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டாம் கட்டத்தில் பெரும்பாலான இடங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடத்தில் மொத்தமுள்ள 50 ரயில் நிலையங்களில், 30 ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதையில் அமைகின்றன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அயனாவரம் பேருந்து நிலையம் அருகே, பூமிக்கு கீழே 72 அடி ஆழத்தில், 623 அடி நீளத்தில், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணியை துவக்கி உள்ளோம்.
ரயில் நிலையத்தில் மூன்று 'லிப்ட்'களும், 14 'எஸ்கலேட்டர்'களும் அமைக்க உள்ளோம்.
இந்த புதிய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, அருகே உள்ள அயனாவரம் பேருந்து நிலையத்திற்கு பயணியர் சென்று வர வசதியாக, அடிப்படை வசதிகளை மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு கூறினர்.