ஈரோடு : ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, துாரபாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் பவித்ரா, 17. மொடக்குறிச்சியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்.
பவித்ராவை கடத்தி, 2022 ஏப்ரலில் திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் இருதரப்பு பெற்றோரும் திருமணத்தை ஏற்கவில்லை. பின் சம்மதம் தெரிவிக்கவே, கோபாலகிருஷ்ணன் வீட்டில் தம்பதி வசித்தனர்.
திருமணத்துக்கு முன்பே சிறுமியுடன் கோபாலகிருஷ்ணன் உறவு கொண்டதால், அவர் கர்ப்பமானார். நாடார்மேட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த, 24ல் அறுவை சிகிச்சை மூலம் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது 'ஜன்னி' எனும் தீவிர உடல் நலக்குறைபாடு ஏற்பட்டதால், 25ம் தேதி ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு பவித்ரா அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கும் உடல் நிலை மோசமாகவே, கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.
மேட்டுகடை அருகே ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது, திடீரென விபத்தில் சிக்கியது. அப்போது, ஸ்ட்ரெச்சரில் இருந்த பவித்ரா, கீழே விழுந்தார்.
இதில் முகம் மற்றும் உடலில் பொருத்தியிருந்த, உயிர் காக்கும் கருவிகள் கழன்று விழுந்தன. வேறு ஆம்புலன்சில் ஏற்றி, 27ம் தேதி அதிகாலை கே.எம்.சி.எச்.,சில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 2ம் தேதி காலை பவித்ரா இறந்தார்.
இதற்கிடையே சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன், மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். 'போக்சோ' பிரிவில் கோபால கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
ஆம்புலன்சை அஜாக்கிரதையாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணமான, தனியார் மருத்துவமனை டிரைவர் சரத் மீது, தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறுமியின் பிறந்த தேதி, திருமண வயது உள்ளிட்டவற்றை கண்டு கொள்ளாமல், கருவுற்றது முதல் பிரசவம் வரை, தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்தது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.