கோவையிலிருந்து மும்பை குர்லாவுக்கு இயக்கப்படும், 'குர்லா' எக்ஸ்பிரஸ் ரயிலில், அதி நவீன எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டதில், ஸ்லீப்பர் இருக்கைகளின் எண்ணிக்கை 400 வரை குறைக்கப்பட்டுள்ளது.
கோவைக்கும், மும்பைக்குமான வர்த்தக தொடர்புகள் அதிகம். அதனால் தான், கோவையிலிருந்து தினமும் இயக்கப்படும் கோவை-குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் கிடைப்பது எப்போதுமே அரிதிலும் அரிதாக உள்ளது. இந்த ரயில், முன்பு, மும்பையின் குர்லாவிலிருந்து பெங்களூரு வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
கொங்கன் ரயில்வே அமைத்த பின், கோவை வழியிலான இரண்டு ரயில்கள் திருப்பப்பட்டன. அதை ஈடுகட்டும் வகையில், 1998ல், அப்போதைய கோவை எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் முயற்சியால், இந்த ரயில் கோவை வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த ரயிலில், முன்பு 11 பெட்டிகள் சாதாரண ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகளாக இருந்தன. இதனால் நடுத்தட்டு மக்கள், வர்த்தகர்கள் பலரும் இந்த ரயிலில் தொடர்ந்து பயணித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 26ம் தேதியிலிருந்து இந்த ரயிலில் அனைத்துப் பெட்டிகளும் எல்.எச்.பி., எனப்படும் அதி நவீன வசதிகளுடைய பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றம், ஒரு வகையில் வரவேற்கத்தக்கதாக இருப்பினும், இதில் சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேலே குறைக்கப்பட்டுள்ளது.
முன்பு, 11 பெட்டிகளில் 720 ஸ்லீப்பர் இருக்கைகள் இருந்தன. தற்போது மாற்றப்பட்டுள்ள எல்.எச்.பி., பெட்டிகளில், நான்கு பெட்டிகள் மட்டுமே ஸ்லீப்பர் வகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பெட்டிக்கு 80 இருக்கைகள் என்பதால், 320 ஸ்லீப்பர் இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால் ஸ்லீப்பர் இருக்கைகளின் எண்ணிக்கை 400 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வகுப்பினரை பாதிப்பதாகவுள்ளது.
இதேபோல, வேறு சில ரயில்களில் எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும், ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. உதாரணமாக, துாத்துக்குடி - மைசூரு -மயிலாடுதுறை ரயிலில், எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும், ஸ்லீப்பர் பெட்டிகள் அதே எண்ணிக்கையில் தான் உள்ளது. அந்த ரயில், தென்மேற்கு ரயில்வேயால் இயக்கப்படுகிறது.
குர்லா எக்ஸ்பிரஸ், மத்திய ரயில்வேயால் இயக்கப்படுகிறது. எனவே, துாத்துக்குடி-மைசூரு-மயிலாடுதுறை ரயிலில், தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் செய்தது போல, குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலிலும் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.
குர்லா எக்ஸ்பிரஸ், தொலைதுார ரயில் என்பதால் ஏ.சி.,பெட்டிகளை அதிகம் சேர்த்திருப்பதாக, ரயில்வே அதிகாரிகளால் விளக்கம் தரப்படுகிறது. எனவே, குறைந்தபட்சம் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை ஏழாக அதிகரிக்க வேண்டுமென்று கோரப்படுகிறது. இதை மத்திய ரயில்வே மண்டல அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டியது, இங்குள்ள மக்கள் பிரதி நிதிகள் கடமையாகும்.