சேலம், டிச. 5-
சேலம், கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நவீன இருதய தீவிர சிகிச்சைப்பிரிவு நேற்று தொடங்கப்பட்டது. கோவை, ஜே.கே.பி., மெடிக்கல் சென்டர் மூத்த இருதய சிகிச்சை நிபுணர் பெரியசாமி, ரிப்பன் வெட்டி நவீன சிகிச்சைப்பிரிவை திறந்து வைத்தார். மருத்துவமனை இயக்குனர்கள் செல்லம்மாள், சரஸ்வதி, சேலம் அரசு மருத்துவக்கல்லுாரி இருதய சிகிச்சைத்துறை தலைவர் கண்ணன், மருத்துவமனை இருதயத்துறை நிபுணர் நாகூர்மீரான்
உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அர்த்தனாரி கூறியதாவது:
இருதய சிகிச்சைப்பிரிவை மேலும் மேம்படுத்த நவீன இருதய சிகிச்சைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த, 'கேத் லேப்' உடன், சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கூடிய, 'எக்மோ' கருவி, இருதய சிகிச்சை பிரிவு உள்ளேயே, 'ஐஏபிப்பி., டயாலிசிஸ், இசிஜி, எக்மோ', செயற்கை சுவாச கருவி என, அனைத்தும் ஒருசேர உள்ளதால், ஒரு மணி நேரத்தில் நோயாளி நிலை அறிந்து ஆஞ்சியோ சிகிச்சை செய்ய முடியும். 24 மணி நேரமும் மருத்துவர்கள்
மட்டுமின்றி, 'மானிட்டர்' மூலம் கண்காணித்து நோயாளிக்கு உடனே உயர்தர சிகிச்சை அளிக்க முடியும் என்பதால், இது சேலம் மண்டலத்தின் நவீன இருதய சிகிச்சை மையமாக விளங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனை இயக்குனர் சுகுமார், பங்குதாரர் துரைசாமி, சேலம், ஏபிஐ., கிளை தலைவர் மருத்துவர் ராஜேஷ், இந்திய மருத்துவ சங்க தேசிய முன்னாள் துணைத்தலைவர் பிரகாஷ், ஆன்மிக அன்பர் நாகராஜன் உள்பட பலர்
பங்கேற்றனர்.