ஈரோடு, டிச. 5-
தேர்வு எழுத அனுமதிக்காததால், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த, 12 பேர் ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள, 107 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, 8,237 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டத்தில், 12 தேர்வு மையங்களில், 360 அறைகளில் நேற்று காலை எழுத்து தேர்வு நடந்தது. மொத்தம் 6,133 பேர் தேர்வு எழுதினர். 2,104 பேர் ஆப்சென்ட் ஆகினர். காலை 9:30 மணிக்கு தேர்வர்கள் மையத்துக்கு வந்து விட வேண்டும். 9:50 மணிக்கு தேர்வறைக்குள் சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் திண்டல் வேளாளர் கல்லுாரி மையத்துக்கு, 9:45 மணிக்கு வந்த, நான்கு பெண்கள் உள்ளிட்ட, ௧௨ தேர்வர்களை, நுழைவு வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அங்கு ஆய்வுக்கு வருவதை அறிந்த, 12 பேரும், 10:35 மணிக்கு தேர்வு மையம் முன், பெருந்துறை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்து, கலெக்டரிடம் முறையிட அறிவுறுத்தினர். அவர்களும் ஓரமாக நின்ற நிலையில் கலெக்டரின் கார், நிற்காமல் தேர்வு மையத்துக்குள் சென்று விட்டது. ஆய்வு செய்த கலெக்டர் மற்றொரு வாயில் வழியே சென்று விட்டார். இதனால் மறியல் செய்தவர்கள் மீண்டும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். இதனால் ஹால் டிக்கெட்டை கிழித்து வீசி சென்றனர்.