தேர்வெழுத வந்த புதுப்பெண்
அந்தியூர்: கிராம உதவியாளர்களுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. அந்தியூர் அருகே பருவாச்சியில் தனியார் பள்ளி மையத்தில், 1,100 பேர் தேர்வெழுதினர். இதில் பவானி அருகே மூன்ரோடு பகுதியை சேர்ந்த ஹரிணி, வினோத் என்பவரை நேற்று காலை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையுடன் தேர்வெழுத கணவருடன் வந்தார். தேர்வு எழுதி முடித்தவுடன் காரில் கிளம்பி சென்றார்.
பவானியில் மினி மாரத்தான்
பவானி: தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாளை ஒட்டி, பவானியில் இருந்து தளவாய்பேட்டை வரை, 9 கி.மீ., துாரத்துக்கு நேற்று மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
ஐயப்பனுக்கு ஆராட்டு விழா
கோபி: கோபி, வேலுமணி நகரில், ஐயப்பன் கோவிலில், பிரமோற்சவம், சங்காபிஷேகம், லட்சார்ச்சனை மற்றும் புஷ்பாஞ்சலி விழா, கடந்த மாதம், 25ல் துவங்கியது. இந்நிலையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன், செண்டை மேளம் முழங்க, கோவிலை வலம் வந்தார். பின் பால், சந்தனம், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகளிர் ஆராட்டு விழா குழுவினர், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பயிரை சேதம் செய்த
யானைகளால் சோகம்
தாளவாடி: தாளவாடியை சேர்ந்தவர் மகாதேவப்பா. மானாவாரி நிலத்தில் மூன்று ஏக்கரில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு காட்டுக்குள் புகுந்த யானைகள், பயிர்களை சேதம் செய்தன. வனத்தை ஒட்டிய தோட்டத்துக்குள், யானைகள் நுழைவதை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமான பயிர்களுக்கு நஷ்ட ஈடு வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
வணிகர் சங்க பேரமைப்பு
இணைய தள துவக்க விழா
ஈரோடு: தமிழ்நாாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், ஈரோடு மாவட்ட இணைய தள துவக்க விழா ஈரோட்டில் நடந்தது. மாநில தலைவர் விக்கிரமராஜா துவக்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் தமிழரசன், மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காசி ரயில் பெட்டிக்கு
போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு: எர்ணாகுளத்தில் இருந்து சென்னை வழியே பீகார் மாநிலம் பாட்னா செல்லும் விரைவு ரயிலில், காசி செல்ல ஏதுவாக மூன்று பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நேற்று காலை, 6:35 மணிக்கு ஈரோடு ஸ்டேஷன் வந்தடைந்தது.
காசி செல்லும் மூன்று பெட்டிகளுக்கும் ஈரோடு ரயில்வே போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார், வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழப்பு பிரிவு, மோப்ப நாய் பிரிவு, ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பெட்டியிலும் ரயில்வே ரோந்து போலீசார் இருந்தனர்.
கவுந்தப்பாடியில் கனமழை
ஈரோடு: மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக கவுந்தப்பாடியில், 17.2 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் பெருந்துறையில்-2, பவானியில்-3 மீ.மீ., மழை பெய்தது. டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான கொங்கர்பாளையம், வாணிப்புத்துார், டி.என்.பாளையம், பங்களாப்புதுார், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், அடசபாளையம், பெருமுகை, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
இளம்பெண் மாயம்
பெருந்துறை: விஜயமங்கலம், தாசம்பாளையத்தை சேர்ந்த நாகராஜின், 17 வயது மகள், பெருந்துறையில் ஒரு கடையில் வேலை செய்து வந்தார். கடந்த, 1ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளுக்கும் செல்லவில்லை. நாகராஜ் புகாரின்படி பெருந்துறை போலீசார், இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
போக்குவரத்து போலீசார்
அபராதம் விதிப்பு
ஈரோடு, டிச. ௫-
ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். கடந்த மாதம் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக, 39 வழக்குகள்; ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றதாக, 45௫ வழக்குகள்; ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றதாக, 19 வழக்குகள், காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக இரு வழக்குகள் உள்பட, 754 வழக்குகள் பதிவு செய்தனர். இதன் மூலம், 2.௭௭ லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
காங்கேயத்தில் கனமழை
காங்கேயம், டிச. 5-
காங்கேயம் பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை இடைவிடாது பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே, வானம் மேகமூட்டத்துடன் துாறல் மழை போட்டபடி இருந்தது. மதியம், ௩:௦௦ மணிக்கு மேல் வேகமெடுத்து கனமழையாக கொட்டியது. அரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், காங்கேயத்தின் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன. பகல் முழுவதும் இடைவிடாது பெய்த மழையால், இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. கிராம பகுதிகளிலும் கனமழை பெய்ததால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போலீஸ்காரரிடம் சவால்
பா.ஜ., நிர்வாகி கைது
காங்கேயம், டிச. 5- -
காங்கேயத்தில் அரசு பஸ்சில் சென்றபோது, போலீசார் மற்றும் பா.ஜ.,வினரிடையே பிரச்னை ஏற்பட்டது. காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த இரு தரப்பினருக்கும், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பா.ஜ., மாவட்ட செயலாளரான தாராபுரத்தை சேர்ந்த ராஜா, பணியில் இருந்த ஒரு போலீஸ்காரரை, ஒருமையில் பேசியதுடன், ஒத்தைக்கு ஒத்தை வா பார்க்கலாம் என சவால் விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, ராஜாவை நேற்று கைது செய்தனர்.
வி.ஹெச்.பி., சார்பில்
கீதா ஜெயந்தி விழா
தாராபுரம், டிச. 5-
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கீதா ஜெயந்தி விழா தாராபுரத்தில் நடந்தது.
தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு, பசு பாதுகாப்பு மற்றும் கோசாலை பொறுப்பாளர் ராஜகோபால் தலைமை வகித்தார்.
கிருஷ்ண பகவானால் அருளப்பட்ட பகவத்கீதை சிறப்புகள் குறித்து, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் லக்ஷ்மண நாராயணன் பேசினார். வி.ஹெச்.பி., மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம், கோட்ட பொறுப்பாளர் விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் நியமனம்
தாராபுரம், டிச. 5-
தாராபுரத்தில், நேற்று நடந்த கூட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இதன்படி தாராபுரம் நகர தலைவராக கதிர்வேல், திருக்கோயில் மற்றும் திருமடங்கள் பிரிவு மாவட்ட இணை செயலாளராக நடராஜன், மாவட்ட இணை செய்தி தொடர்பாளராக ஹரிதாஸ் நியமிக்கப்பட்டனர். இத்தகவலை கோட்ட பொறுப்பாளர் விஜயன் தெரிவித்தார்.
சர்ச் தேர்த்திருவிழா துவக்கம்
ஈரோடு, டிச.5-
ஈரோடு புனித அமல அன்னை ஆலய தேர்த்
திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஈரோட்டில் உள்ள பழமை வாய்ந்த புனித அமல அன்னை தேவாலயத்தில், நடப்பாண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமை தாங்கி, புனித அமல அன்னையின் படத்துடன் கூடிய கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக சிறப்பு திருப்பலி நடந்தது. வரும், 8ம் தேதி சிறப்பு திருப்பலி தொடர்ந்து நடக்கிறது.
முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா, 11ம் தேதி துவங்குகிறது. 18ம் தேதி, கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
ஒரு கிலோ முருங்கை ரூ.100க்கு விற்பனை
காங்கேயம், டிச. 5-
வெள்ளகோவில் முருங்கை கொள்முதல் நிலையத்துக்கு, மர முருங்கை, செடி முருங்கை, கரும்பு முருங்கை அனைத்தும் நேற்று ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்றது.
கடந்த வாரத்தை விட ஒரு கிலோவுக்கு, 45 ரூபாய் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொடிவேரி தடுப்பணை 'வெறிச்'
கோபி, டிச. 5-
வானம் மேகமூட்டமாக இருந்ததால், குறைந்த சுற்றுலா பயணிகளே வந்ததால், கொடிவேரி தடுப்பணை வளாகம் சுறுசுறுப்பிழந்தது.
பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
தடுப்பணையில் இருந்து அருவியாக கொட்டும் தண்ணீரில் குளிக்கும் வசதி எளிமை என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
வார விடுமுறை நாளான நேற்று, குறைந்த சுற்றுலா பயணிகளே வந்தனர். வானம் மேகமூட்டமாக இருந்ததே, இதற்கு காரணம் என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாராபுரத்தில் கொட்டிய கனமழை
தாராபுரம், டிச. 5-
தாராபுரத்தில், மதியம் மற்றும் மாலையில் கனமழை பெய்தது.
தாராபுரம் நகரில், நேற்று காலை வழக்கம் போல வெயில் கொளுத்திய நிலையில், திடீரென வானம் கருத்து மேகமூட்டமானது. மதியம், ௧:௦௦ மணியளவில், லேசான தூரலுடன் துவங்கிய மழை, சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது. ஒரு மணி நேரம் பெய்த மழை, சிறிது இடைவெளி விட்டு மாலை, 4:30 மணியளவில் பரவலாக பெய்தது. உப்புத்துறைபாளையம், கொண்டரசம்பாளையம், நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக பெய்தது.