ஈரோடு, டிச.5-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 23 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்து, சீர் வரிசை பொருட்களை வழங்கி, அமைச்சர் வாழ்த்தினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுந்தோறும், 500 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைக்க சட்டசபையில் அறிவிப்பு வெளியானது. இதன்படி ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மண்டலத்தில், 23 ஜோடிகளுக்கு இலவச திருமணம், வேளாளர் மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மேயர் நாகரத்தினம், எம்.எல்.ஏ.,க்கள் சரஸ்வதி, திருமகன் ஈவெரா முன்னிலை வகித்தனர். அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்து, 23 ஜோடிகளுக்கு, மாங்கல்யம் எடுத்து கொடுத்து, திருமணத்தை நடத்தி வைத்தார். 23 ஜோடிகளுக்கும் தலா, 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி, மெத்தை, தலையணை, கிரைண்டர், மிக்ஸி என, 59 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கினார். திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் தம்பதிகள் தரிசனம் செய்தனர். அங்கு கோவில் மண்டபத்தில் விருந்து நடந்தது.