நாமக்கல், டிச. 5-
'நெஸ்பேக்' அறிவிக்கும், 40 காசு மைனஸ் விலைக்கு மட்டுமே, பண்ணையாளர்கள் முட்டை விற்பனை செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள, 1,100 பண்ணைகளில் வளர்க்கப்படும், 5 கோடி கோழிகள் மூலம், தினமும், 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டை, தமிழக சத்துணவு திட்டம், உள்ளூர், கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), கொள்முதல் விலையை, வாரத்தில், ஞாயிறு, புதன், வெள்ளி என, மூன்று நாட்களுக்கு நிர்ணயம் செய்கிறது. அதேபோல், நாமக்கல் முட்டை விலை நிர்ணய ஆலோசனை குழு (நெஸ்பேக்), கொள்முதல் விலையில் இருந்து குறைத்து விற்பனை செய்ய, பண்ணையாளர்களுக்கு பரிந்துரை செய்கிறது. அவற்றில் இருந்து மேலும், குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என, பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், 'நெஸ்பேக்' அறிவிக்கும் மைனஸ் விலைக்கு மேல் விற்க வேண்டாம் என, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:
பர்வாலா உள்ளிட்ட வட மாநிலங்களில், அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. நாமக்கல் மண்டலத்தில், பெரும்பாலான பண்ணைகளில் முட்டை இருப்பு இல்லை. அதனால், 'நெஸ்பேக்' அறிவிக்கும் மைனஸ், 40 காசுக்கு மேல், யாரும் முட்டை விற்க வேண்டாம். வரும், 7ம் தேதி கார்த்திகை தீபம் முடிகிறது. அதன்பின் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, பண்ணையாளர்கள் ஒருமித்த கருத்தோடு, 'நெஸ்பேக்' அறிவிக்கும் விலைக்கு மட்டுமே, முட்டை விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.