சேலம், டிச. 5-
லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு புகாரால் வனச்சரக அலுவலர் இருவர் இடமாற்றப்பட்டனர்.
சேலம், ஆத்துார் கோட்ட வனத்துறை பணிகளில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. விஜிலன்ஸ் பிரிவு உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் குழுவினர், சேலம் கோட்ட வன அலுவலகம், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஆத்துார் கோட்டத்தில் கருமந்துறை ஆகிய இடங்களில் விசாரித்து அறிக்கை அளித்தனர். இதன்படி இரு வனச்சரக அலுவலர்களான, பெத்தநாயக்கன்பாளையம் அசோக்குமார் கோவைக்கும், சேலம் சமூக காடுகள் பிரிவு முரளிதரன் வேலுாருக்கும் மாற்றப்பட்டனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அசோக்குமார் பணியாற்றிய தம்மம்பட்டி வனப்பதியை ஒட்டி குவாரி செயல்பட்டது. பின் அந்த இடம் வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு குவாரி செயல்பாடு நிறுத்தப்பட்டது. ஆனால், லஞ்சம் பெற்று, மாங்கனீஸ் எடுக்க உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்தது. அத்துடன் அவர் மீது, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு உள்ளது. மாவட்ட வனத்துறையில் பணிபுரியும் உயரதிகாரி மனைவியின் தம்பி என்பதால், செல்வாக்கை பயன்படுத்தி நீண்ட நாளாக சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்தார்.
அத்துடன் குரும்பப்பட்டி பூங்காவில் உயரதிகாரியின் மாமனார் பெயரில், 55 லட்சம் ரூபாய்க்கு மேல் ஒப்பந்தம் எடுத்து பணி நடந்தது. அதில் பணியை முடிக்காமல் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அப்போது பூங்கா வனச்சரக அலுவலராக முரளிதரன் இருந்தார். அதன்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.