நாமக்கல்: தொடர் பணியால் மன உளைச்சலுக்கு ஆளான அரசு பஸ் டிரைவர், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், பஸ்சை நிறுத்திவிட்டு சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல்லில் இருந்து வேலம்பட்டிக்கு, '10-சி' அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் நேற்று மதியம், 12:00 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. பஸ்சில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பணியில் இருந்த கண்டக்டர் ராஜாராமிடம், டிரைவர் மணிவண்ணன், 40, சென்றார் 'தொடர்ந்து, நான்கு நாட்கள் இயக்குவதால், உடல்நிலை சரியில்லை. அதனால் பஸ்சை இயக்கமாட்டேன்' என்று கூறிவிட்டு, இறங்கி சென்று விட்டார். இதனால் கண்டக்டர், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். போக்குவரத்து பணிமனை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட, மாற்று டிரைவரை அனுப்பி பஸ்சை இயக்கினர். இந்த குளறுபடியால் ஒரு மணி நேரம் தாமதமாக பஸ் புறப்பட்டது.
இதுகுறித்து நாமக்கல் போக்குவரத்து பணிமனை அலுவலர்கள் கூறும்போது, 'இன்று முகூர்த்த நாள் என்பதால், பலர் விடுமுறையில் சென்று விட்டனர். அதனால் டிரைவருக்கு மாற்று ஏற்பாடு செய்யமுடியவில்லை. மாற்று டிரைவர் ஏற்பாடு செய்து பஸ் இயக்கப்பட்டது,'' என்றனர்.