சேலம், டிச. 5-
மல்லுார் பட்டதாரி வாலிபர், விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், உடலுறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர்.
சேலம் மாவட்டம் மல்லுாரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன், 26, பி.காம்., படித்த இவர், சேலம் சேகோசர்வ் நிறுவனத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றினார். கடந்த, 30ம் தேதி பணி முடிந்து 'ஸ்டார்சிட்டி' பைக்கில், வீட்டுக்கு இரவு, 8:30 மணிக்கு புறப்பட்டார்.
கொண்டலாம்பட்டி சந்திப்பில் சென்றபோது, பாரத் பெட்ரோல் லாரி மோதியதில், தலையின் பின்பகுதியில் ரத்தகாயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் டிச., 1ல் அனுமதிக்கப்பட்டார். ரத்தக்கசிவை கட்டுப்படுத்த முடியாததால் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர், மணிகண்டன் உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இரு கண்கள், இருதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், இரு கிட்னிகள் தானமாக பெறப்பட்டன. சேலம் மருத்துவமனைக்கு கிட்னி, இதர உறுப்புகள் சென்னை, கோவை, ஈரோடு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.