சென்னை 'காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கான நிதியை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எம்.எஸ்.குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
'இதுவரை, அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்கக் கோரிய என் மனுவை பரிசீலிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
இவ்வழக்கு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அன்பழகன் ஆஜராகி, ''ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு, அரசு நிதி ஒதுக்கவில்லை,'' என்றார்.
அரசு தரப்பில், அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, ''ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்துக்கான திட்ட மதிப்பீடு விபரங்களையும், கூடுதல் வசதிகள் பற்றியும், உயர் நீதிமன்ற பதிவாளருக்கு, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அனுப்பி உள்ளார்,'' என்றார்.
இதையடுத்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கான நிதியை விரைவில் வழங்க, அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்து வழக்கை பைசல் செய்தனர்.