மார்கழி இசை விழாவை முன்னிட்டு, மயிலாப்பூர் சுனாத லஹரி சபாவில், கர்நாடக இசை குறித்து, ரசிகர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
வயலின் கலைஞர் ஆர்.கே.ஸ்ரீராம்குமார், மிருதங்க கலைஞர் கே.அருண்பிரகாஷ் ஆகியோர், ரசிகர்களின் கேள்விகளுக்கு ஆர்வமாக பதில் அளித்தனர்.
இசை மாணவர்கள் முதலில் அறிய வேண்டியது?
ஸ்ரீராம்குமார்: கர்நாடக இசையை ரசிக்க வேண்டும். யாருடைய பாடல்கள் என்றில்லாமல் அனைவரின் பாடல்களையும் ரசிக்க வேண்டும். எப்படி ரசிப்பது என்பது, நாளாக நாளாக தெரியும்.
இசை கேட்க கேட்க, தியாகராஜர், ஷ்யாமா சாஸ்திரி, முத்துசாமி தீக் ஷிதர் என ஒவ்வொருவராய், உங்களுக்குள் பிடிபடுவர். எப்போதும், எங்கிருந்தும் கற்கலாம். பள்ளியில் நடக்கும் இறைவணக்க கூட்டமும் இசை தான்.
யார் நல்ல குரு?
ஸ்ரீராம்குமார்: பாடுபவரின் தகுதியையும், திறமையையும் பொறுத்து கணக்கிடப்படுகிறது. நல்ல சிஷ்யர் கிடைக்கும்போது நல்ல குரு கிடைப்பார்.
கச்சேரி நடத்துவதற்கான தகுதி?
அருண்பிரகாஷ்: நாங்கள் மாணவராக இருந்தபோது, சென்னையில் இருந்த சபாக்களுக்கு முதல் ஆளாகச் செல்வோம். பெரிய வித்வான்களின் கச்சேரிகளைக் கேட்டு, பலருடன் விவாதங்கள் செய்வோம். காரசாரமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
அதிலிருந்து நிறைய கற்க முடியும். அப்போது கேட்டதும், பேசியதும் இப்போதும் உதவுகிறது. இசையை, நாள் குறிப்பிட்டு கற்க முடியாது. இசைக்காக தன்னை அர்ப்பணிப்பவரை, நிச்சயம் இசை அங்கீகரிக்கும்.
கர்நாடக இசை நிகழ்ச்சிக்கு பணம் அவசியமா?
ஸ்ரீராம்குமார்: உண்மைதான். அப்போது, இசை கலைஞர்களை ஆதரிக்க மன்னர்களும், செல்வந்தர்களும் இருந்தனர். இப்போது, இசையைக் கற்கவும், கச்சேரிக்கு கலைஞர்களை அழைக்கவும் வருவாய் முக்கியமாகிறது.
தொகை கூடுதலாக கிடைத்தாலும், குறைவாக கிடைத்தாலும், ஸ்ருதிப் பெட்டியின் சத்தம் கேட்டு விட்டால், இசைக்குள் மூழ்கியாக வேண்டும்.
குருவுக்கும், ரசிகனுக்கும், இசைக்கும் உண்மையாகப் பாட வேண்டும். அப்போது தான், அது, நம்மிடம் நிலைக்கும்; நம்மை நிலைநிறுத்தும்.
ஒவ்வொரு குருவும் வெவ்வேறாக பாடுகின்றனர். சிஷ்யருக்கு குழப்பம் வராதா?
ஸ்ரீராம்குமார்: ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, ஒரே ராகத்தைப் பாடுவர். அனைத்தும் கேட்க இனிமையாக இருக்கும். அந்த வேற்றுமையில் தான் இசை பரம்பரையின் சிறப்பு உள்ளது.
நாடு முழுதும் நிரவல், சுரம், பெங்காலி, கசல் என, பிரபல பாடகர்களின் சிறப்பு பாடல்களை, பழமைக்கும் வளமைக்கும் ஏற்ப எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடினார்.
செம்மங்குடி ஜி.என்.பாலசுப்பிரமணியன், டி.என்.கிருஷ்ணா, பிருந்தா, டி.கே.பட்டம்மாள் உள்ளிட்டோரின் பாடல்களும் அப்படிப்பட்டவை.
குருவிடம் விளக்கம் பெறுவது எப்படி?
அருண்பிரகாஷ்: குருவிடம் அறிய, ஆர்வத்துடன் எதையும் விசாரிப்பது தவறில்லை. கேள்வியில் குறிக்கோள் இருந்தால், கேட்பதில் பணிவு வரும். கேள்வியில் குதர்க்கம் இருந்தால், பதிலும் வராது, சங்கீதமும் வராது.