சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் கருப்பசாமி, 32. இவர், 2019 ஜன., 11ல், பணி முடித்து, தன் இருசக்கர வாகனத்தில் மணலி காமராஜர் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, எதிரே வந்த ஆட்டோ, இரு சக்கர வாகனத்தை முந்த முயன்றபோது, கருப்பசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, ஜன., 11ல் உயிரிழந்தார்.
தன் கணவரின் இறப்புக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், அவரது மனைவி ராமலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி சந்திரசேகரன் பிறப்பித்த தீர்ப்பு:
ஆட்டோ உரிமையாளர், ஓட்டுனர் உரிமம் இல்லாத நபரிடம் வாகனத்தை ஓட்ட அனுமதித்து உள்ளார். இதனால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் இறந்துள்ளார்.
எனவே, இழப்பீட்டை மனுதாரருக்கு முதலில் காப்பீட்டு நிறுவனம் கொடுத்து விட்டு, பின் அந்த தொகையை ஆட்டோ உரிமையாளரிடம் வசூலித்து கொள்ளலாம். எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 53.74 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், 'லிபர்டி வீடியோகான் ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.