மடிப்பாக்கம், மடிப்பாக்கம், அய்யப்ப நகரில் 40 ஏக்கர் பரப்பில் ஏரி உள்ளது. வடகிழக்கு பருவமழை சமயத்தில், இந்த ஏரிக்கு தண்ணீர் செல்வதில் இடையூறு இருப்பதால், ஏரி முழு கொள்ளளவை எட்டுவதில்லை.
இது குறித்து, நீர்நிலைகள் புனரமைப்பு இயக்கத்தின் நிர்வாகி சீனி சேதுராமன் கூறியதாவது:
கோகுலம் காலனி, பாரத் நகர், மூவரசம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் மழை நீர், மடிப்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலை, ஆந்திரா வங்கி அருகே உள்ள கால்வாய் வழியாக, மடிப்பாக்கம் ஏரியை வந்தடைகிறது.
இந்த ஏரியின் உபரி நீர், மற்றொரு கால்வாய் வழியாக, கீழ்க்கட்டளை ஏரியின் போக்கு கால்வாயில் கலந்து, நாராயணபுரம் ஏரியை அடைகிறது.
அதாவது, ஆந்திரா வங்கி அருகே உள்ள ஒரு கால்வாய், மடிப்பாக்கம் ஏரியின் நீர்வரத்து பாதையாகவும், இன்னொரு கால்வாய், உபரி நீருக்கான வடிகால்வாயாகவும் உள்ளது.
ஒரே இடத்தில், இரு கால்வாயும் அருகருகே இருப்பதால், மடிப்பாக்கம் ஏரிக்கு வரவேண்டிய மழை நீர், கீழ்க்கட்டளை நோக்கி செல்கிறது.
எனவே, கீழ்க்கட்டளை நோக்கி செல்லும் வடிகால் பாதையை அடைத்து, மடிப்பாக்கம் ஏரிக்கு நீர் கிடைக்கும் வகையில் அமைக்க வேண்டும். அதாவது, கீழ்க்கட்டளை வடிகால்வாய் குறுக்கே, 3 அடி உயரத்திற்கு மதகு அல்லது தடுப்பணை அமைத்து, மடிப்பாக்கம் ஏரிக்கு தண்ணீரை மாற்றிவிட வேண்டும்.
மடிப்பாக்கம் ஏரி நிரம்பி வெளியேறும் நீர், கீழ்க்கட்டளை ஏரிக்கு தானாகவே சென்றுவிடும்.
இது குறித்து, சென்னை மாநகராட்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை துறையிடம் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்வதில்லை.
மூன்று துறையினரும் இணைந்து, இதற்கான நடவடிக்கையை எடுத்து, மடிப்பாக்கம் ஏரியை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.