சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் தாலுகா அலுவலகம், 2009ம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்போது, 22 கிராமங்கள் இருந்தன.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தில் இருந்த இந்த அலுவலகம், 2018ம் ஆண்டு, சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
தற்போது, 14 கிராம நிர்வாக அலுவலகங்களுடன் செயல்படுகிறது. தமிழகத்தில், அதிக மக்கள் தொகை உடைய பெரிய தாலுகாவாக உள்ளது.
இங்கு, ஊழியர்கள் பற்றாக்குறையால், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. இந்த அலுவலகத்தில், 15 பேர் இருக்க வேண்டும். ஆனால் ஏழு பேர் தான் உள்ளனர்.
சான்றிதழ்கள், பட்டா தொடர்பாக விளக்கம் கேட்க செல்லும் பொதுமக்களுக்கு, உரிய பதில் அளிக்க ஊழியர்கள் இல்லை. இதனால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இருக்கும் ஊழியர்களில் பலர், கள ஆய்வு, நீதிமன்றம், ஆய்வு கூட்டம் என செல்வதால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
இரவு காவலாளி ஓய்வு பெற்று, ஒன்றரை ஆண்டு ஆகியும், மாற்று ஊழியர் நியமிக்கவில்லை.
சோழிங்கநல்லுார் அலுவலகத்தின் முக்கியத்துவம் அறிந்து, பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய, போதிய ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.