கூடுவாஞ்சேரி : நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, 11-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், தண்ணீர் குழாய் அமைத்து, குடிநீர் வினியோகம் செய்வதற்காக, 1,300 மீட்டருக்கு 'பைப் லைன்' அமைக்கும் பணியை, புண்ணியகோட்டி என்பவர், 9.80 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம்பெற்றார்.
ஆனால், அவர் அப்பணிகளை செய்யாமல், செந்தில் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளார். செந்தில், தரமற்ற முறையில், பைப் லைன் அமைக்கும் பணியை செய்து முடித்ததாக கூறப்படுகிறது.
இதனால், குடிநீர் வரும் வேகத்தில், பைப் லைன்கள் சேதமுற்று, குடிநீர் முறையாக பகுதி மக்களுக்கு செல்லவில்லை.
இது குறித்து, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். புகாரின்படி, 11வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் தேவி, நகராட்சி தலைவர் மற்றும் ஆணையருக்கு புகார் அளித்தார்.
அதன் பெயரில், மீண்டும் உதவி ஒப்பந்ததாரர் செந்தில், ஏற்கனவே செய்த பணிகளை, மீண்டும்சரி செய்து வருகிறார்.
ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய பணியை, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் நிறைவடையாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது.
இது குறித்து, வார்டு கவுன்சிலர் தேவி கூறியதாவது:
எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், குடிநீர் பைப் லைன் அமைக்க, புண்ணியகோடி என்பவருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அவரிடம் இருந்து சப் - கான்ட்ராக்ட் பெற்ற செந்தில், தரமற்ற பைப்களை பொருத்தி, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து புகார் அளித்ததால், மீண்டும் சீரமைக்கும் பணியை செய்து வருகிறார். ஆனாலும், சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.