ராஜபாளையம் : சேத்துார் அருகே முத்துசாமிபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 2 மகளிர் சுகாதார வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முத்துசாமிபுரம் ஊராட்சி காமராஜர் நகர் 1வது மட்டும் 2வது வார்டில் 1500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினரின் தொடர் கோரிக்கை படி இரண்டு ஆண்டுகளுக்கு முன் மகளிருக்கான கழிப்பிடம் இரு பகுதிகளில் கட்டப்பட்டது.
ஆனால் இன்றுவரை திறக்கப்படாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து முத்துச்சாமிபுரம் ஊராட்சி நிர்வாகத்திடமும், கிராம சபை கூட்டத்திலும் கோரிக்கை வைத்தும் திறப்பதற்கான நடவடிக்கை இல்லை.
எனவே அப்பகுதியை சேர்ந்த 20கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் வி.சி., கட்சி தொகுதி செயலாளர் ஊமைத்துறை தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.