சிவகாசி : சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரை, திருத்தங்கல் ரோடு உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் முக்கிய ரோடுகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி ஏற்படுகிறது. எனவே இங்கு லாரி முனையம் அமைக்க வேண்டும்.
சிவகாசியில் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி தொழில் இருப்பதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வருகின்றன. சிவகாசிக்கு மூலப்பொருட்களை கொண்டு வருவதற்காகவும், உற்பத்தி பொருட்களைக் கொண்டு செல்வதற்காகவும் தினமும் 200 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் இவைகளை தனியாக நிறுத்துவதற்கு என லாரி முனையம் இல்லை. இதனால் நகருக்கு பல்வேறு சரக்குகள் ஏற்றி வருகின்ற கனரக வாகனங்கள் அனைத்தும் திருத்தங்கல் ரோடு, சிறுகுளம் கண்மாய் கரை ரோட்டில் ஒரு கி.மீ., துாரத்திற்கு அடுத்தடுத்து கனரக வாகனங்களை நிறுத்தி உள்ளனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பதோடு விபத்திற்கும் வழி ஏற்படுகிறது. தவிர விருதுநகர் பழைய ரோடு, கட்டளை பட்டி ரோடு, சாத்துார் ரோடு, காமராஜர் பூங்கா அருகே உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ரோட்டில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றது. ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ரோட்டில் இருபுறமும் நிறுத்தப்படுவதால் கல்லுாரி பஸ்கள், நகர் பஸ்கள் இதனைக் கடப்பதற்கு பெரிதும் சிரமப்படுகின்றன.
மேலும் டூவீலரில் செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. எதிரெதிரே வருகின்ற வாகனங்கள் விலகிச் செல்ல இடமில்லை. இதனை தவிர்ப்பதற்கு சிவகாசியில் லாரி மூலையம் அமைக்க வேண்டும். விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டினை தற்காலிகமாக லாரி முனையமாக மாற்றலாம், அல்லது மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் லாரி முனையம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருப்பையா, ஓய்வு அரசு ஊழியர்: மாநகராட்சியான சிவகாசி தொழில் நகரம் என்பதால் இங்கு தினமும் அதிகமான கனகர வாகனங்கள் வந்து செல்கின்றன. ஆனால் இவைகளை நிறுத்துவதற்கு இடம் இல்லை. இதனால் போக்குவரத்து நிறைந்த ரோட்டில் நிறுத்தப்படுகின்றது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் லாரிகளை நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
பரமசிவம், சிவகாசி குட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசன் தலைவர்: தொழில் நகரான சிவகாசிக்கு வருகின்ற கனரக வாகனங்கள், நிறுத்தப்படுவதற்கு லாரி முனையம் இல்லாததால் வேறு வழியின்றி போக்குவரத்து நிறைந்த ரோட்டில் நிறுத்தப்படுகின்றது.
இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போலீசாரால், குறைந்தது ரூ. 500 முதல் அபராதம் விதிக்கப்படுகின்றது. ஆனாலும் வேறு வழி இல்லாமல், அபராதம் கட்டினாலும் பரவாயில்லை என பாதுகாப்பு கருதி நிறுத்துகின்றனர். தனியாக வேறு எங்கு நிறுத்தினாலும் லாரியில் உள்ள சரக்குகளுக்கு பாதுகாப்புக்கான நிலை இல்லை.
வந்த அன்று கிளம்பும் லாரிகள் தான் இவ்வாறு நிறுத்தப்படுகின்றது. ஒன்று அல்லது இரு நாட்களுக்கு மேற்பட்டு நிறுத்தப்படும் லாரிகள் தனியார் லாரி செட்டிற்கு சென்று விடுகிறது. எனவே மாநகராட்சி சார்பில் பாதுகாப்பான லாரி முனையம் அமைக்க வேண்டும்.
கிருஷ்ணமூர்த்தி, கமிஷனர்: சிவகாசியில் ரிங் ரோடு அமைக்கப்படும் பொழுது, விருதுநகர் ரோட்டில் லாரி முனையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்.