விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20 பேர் போதையில் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு போதை, மது குடிக்கும் பழக்கமே காரணமாக உள்ளது. மாவட்ட அளவில் அதிகரித்துள்ள தற்கொலை சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மது வீட்டுக்கு உயிருக்கு கேடு என்பதை அடுத்தடுத்து நடக்கும் தற்கொலை சம்பவங்கள் நிரூபிக்கின்றன. மது, போதைக்காக உயிரை மாய்க்கும் அவலம் தொடர்கிறது. இதில் பெரும்பாலும் 15 முதல் 35 வயதுடைய நபர்கள் அதிகம்.
மது குடிக்க பணம் இல்லாததால் தற்கொலை, போதையில் குடிநீர் தொட்டியில் ஏறி குதித்து தற்கொலை, குடும்ப தகராறில் சேலையில் துாக்கு மாட்டி தற்கொலை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில் பலி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மது பழக்கம் தனிநபர், குடும்பம் என்பதை தாண்டி சமூக பிரச்னையாக மாறியுள்ளது. உலகளவில் ஆண்டுதோறும் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்கின்றனர். இதில் 17 சதவீதம் பேர் இந்தியர் அதிலும் மதுவால் ஏற்படும் ஆண்களின் தற்கொலை எண்ணிக்கை தான் அதிகம் என்கிறது ஆய்வு.
இதுகுறித்து மனநலம், தற்கொலை தடுப்பு, ஆலோசனை மைய டாக்டர் கந்தசாமி கூறியதாவது:
தற்கொலைக்கு மனச்சோர்வு, குடி, போதை பழக்கத்திற்கு அடிமையாவது தான் காரணம். மனநல பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டும் நிலையில் தான் பலர் தற்கொலை செய்கின்றனர்.
போதை பழக்கத்தால் ஏற்படும் மனநல பாதிப்பு குறித்து விழிப்புணர்வு அளிப்பது, பாதிக்கப்பட்டோருக்கு ஆலோசனை வழங்குவது, தொடர்ச்சியான வாழ்க்கை திறன் பயிற்சி போன்றவை மூலம் மதுவால் ஏற்படும் தற்கொலையை தவிர்க்கலாம், இதற்கு உரிய கவுன்சிலிங், முழுஉடல் பரிசோதனை, மருந்துகள் உட்கொள்வது தான் வழி, என்றார்.