அனுப்பர்பாளையம்:''அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வேலை பார்ப்பதில்லை'' என்று மாநகராட்சி மண்டலக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.
திருப்பூர் மாநகராட்சி, இரண்டாவது மண்டல கூட்டம் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில், உதவி கமிஷனர் கண்ணன் முன்னிலையில் நடந்தது.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
ராஜேந்திரன் (இந்திய கம்யூ.,): எனது வார்டில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? பணி விவரம் இல்லை. பணியை பார்வையிட அதிகாரிகளும் வருவதில்லை.
நிதி ஒதுக்கீடு பற்றி வெளிப்படையாக ஏன் தெரிவிப்ப தில்லை? அனைத்து ஸ்மார்ட் சிட்டி பணிக்கான நிதி விவரத்தை வெளிப்படையாக தெரிவியுங்கள்.
லோகநாயகி(தி.மு.க.,): பி.என்., ரோட்டில் மின் விளக்கு சரியாக எரிவதில்லை. விபத்து நடக்கிறது. குடிநீர் 15 முதல் 17 நாட்களுக்கு ஒரு முறையே வருகிறது. அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை.
தமிழ்ச்செல்வி (அ.தி.மு.க.,): கேத்தம்பாளையம் பள்ளி அருகில் ரோட்டில் பாலம் கட்டும் பணி பாதியில் பல மாதங்களாக நிற்கிறது. பிச்சம்பாளையம்புதுார் பழைய மண்டலஅலுவலகம் அருகில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.
கோபால்சாமி(தி.மு.க.,): ஜி.என்., நகரில் 2 மின் கம்பத்தை அகற்ற வேண்டும். பொம்ம நாயக்கன் பாளையத்தில் சுகாதார மையத்தை பராமரிக்க வேண்டும்.
புஷ்பலதா (அ.தி.மு.க.,): சாக்கடை கால்வாய் துார்வார வேண்டும்.
மாலதி(தி.மு.க.,): 'லீக்கேஜ்' சரி செய்ய ஆட்கள் வருவதில்லை.
இந்திராணி (அ.தி.மு.க.,): தெரு விளக்கு சரியாக எரிவதில்லை. குப்பை பிரச்னையை தீர்த்து வைத்த அதிகாரிகளுக்குநன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
முத்துசாமி (அ.தி.மு.க.,): நெருப்பெரிச்சல் பஸ் ஸ்டாப் அருகில் குடிநீர் குழாய் உடைந்து ஆறு மாதமாக குடிநீர் விரயமாகி வருகிறது. அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
தாமதமாக துவங்கிய கூட்டம்
மண்டல கூட்டம் காலை 11:00 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள், சில கவுன்சிலர்கள் தாமதமாக வந்ததால், கூட்டம் 11:25 மணிக்கு தொடங்கியது.
இதில் 7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் கவிதா, 17வது வார்டு த.மா.கா., கவுன்சிலர் செழியன், 20வது வார்டு ம.தி.மு.க., கவுன்சிலர் குமார் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
'மேயர் அலுவலகம் முன்
மண்டலக்கூட்டம்'
மண்டல தலைவர் கோவிந்தராஜ் பேசியதாவது:
அதிகாரிகளின் காலை தொட்டு கேட்கிறேன். வேலை பாருங்கள். விருப்பம் இல்லை என்றால் வேலையை விட்டு செல்லுங்கள். ஆர்வமுள்ள பல இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். அவர்கள் வரட்டும்.
குடிநீர் சரியாக வருவதில்லை என்றால், ஏன் அதிகாரிகள் நேரில் சென்று பார்ப்பதில்லை? செய்யும் பணி சரியில்லை என்றால், அதிகாரிகள் சென்று பார்ப்பதில்லை? இது மக்கள் பிரதிநிதிகளுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது. முதல்வர், மக்கள் பிரதிநிதிக்கு, அவமானம் ஏற்படுத்த வேண்டுமென அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கூட்டத்தை கமிஷனர் அலுவலகம் முன் நடத்துவோம்; அதன் பிறகு வேலை நடக்கிறதா என பார்ப்போம். இல்லை என்றால் மேயர் அலுவலகம் முன் நடத்துவோம்.