திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 55 பயனாளிகளுக்கு, ரூ.18.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தலைமைவகித்தனர்.
கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், மொத்தம் 55 பயனாளிகளுக்கு, ரூ.18.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நலத்திட்டங்களை வழங்கி அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அவிநாசியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், வீடு கட்டும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறதா; பணக்கொடை சரியான முறையில் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்து, உறுதிபடுத்தப்பட்டுள்ளது'' என்றார்.
பல்லடம்
முன்னதாக பல்லடம் அருகே பருவாய் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், கயல்விழி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் வினீத், தாசில்தார் நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பகுதி விவசாயிகள், 'விண்ணப்பித்து இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகியும், அரசு திட்டத்தில் ஆடு, மாடுகள் கிடைக்கவில்லை. மற்ற ஊராட்சிகளில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பருவாய் ஊராட்சி மட்டும் இத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது,' என, மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் பரிந்துரைத்தார்.
அவிநாசி
அவிநாசி அருகே வாரச்சந்தை வளாகத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் வசித்து வரும், 47 குடும்பத்தினரிடம் குறைகளை கேட்ட அமைச்சர், அரசு உதவித்தொகை, குடிநீர், மின்சாரம், கழிப்பிட வசதி ஆகியனவற்றையும் கேட்டறிந்தார். அப்போது பேசிய அமைச்சர், 'அனைவருக்கும் புதிய குடியிருப்புகளை கட்டித்தர ஏற்பாடு செய்துள்ளதாக,' உறுதியளித்தார்.
அதன்பின், பெருமாநல்லுார் சென்ற அமைச்சர் அங்குள்ள முகாமிலும் ஆய்வு செய்து, குறைகளை கேட்டறிந்தார்.