குன்னுார்;குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு வருகை தந்த முப்படை தளபதி அனில் சவ்கான் பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் ராணுவம், கப்பல் படை, விமானப்படையில் உள்ள இடைநிலை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நமது நாட்டை சேர்ந்த, 400க்கும் மேற்பட்டோர், நட்பு நாடுகளை சேர்ந்த, 50 அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையில், நேற்று கல்லுாரிக்கு வருகைபுரிந்த நாட்டின் முப்படை தளபதி அனில் சவ்கான், அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அவரிடம், 'வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பயிற்சி அதிகாரிகளை தயார்படுத்த வேண்டும்; ராணுவ பயிற்சி கல்லுாரியின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் அவசியம்' என, முப்படை தளபதியிடம், ராணுவ உயர் அதிகாரிகள் முறையிட்டனர். தொடர்ந்து, கல்லுாரி கமாண்டன்ட் லெப்., ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், கல்லுாரியின் நினைவு சின்னத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.
ஹெலிகாப்டர் ரத்து
கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த முப்படை தளபதி அனில் சவ்கான, நேற்று காலை, 9:40 மணிக்கு ஜிம்கானா மைதானத்தில் இறங்கி கல்லுாரிக்கு சென்றார். நிகழ்ச்சி முடிந்து ஹெலிகாப்டரில் செல்ல இருந்த நிலையில் கடும் மேகமூட்டம் நிலவியதால் கோத்தகிரி சாலை மார்கமாக காரில் கோவை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டார்.