குன்னுார்:குன்னுார்--மேட்டுப்பாளையம் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்தது. பர்லியார் பகுதியில், 14 மி.மீ., மழை பதிவானது. இந்நிலையில், குன்னுார்--மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று காலை, 8:30 மணியளவில் பாறைகள் திடீரென உருண்டு விழுந்தன. இதனை போலீசார், தீயணைப்பு துறையினர் சென்று அகற்றினர்.
மதியம், 2:30 மணியளவில் அதே இடத்தில் மரம், செடிகளுடன் மண்சரிவு ஏற்பட்டு பாறைகளும் உருண்டது. அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. மீண்டும் பாறைகள் அகற்றும் பணி நடந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.
குன்னுாரில் இருந்து சமவெளிக்கு செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டதால், இரண்டரை மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. அப்பகுதியில், நெடுஞ்சாலை துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.