கோவை: "வருமான வரி வளர்ச்சி விகிதத்தில் தமிழகத்தில் கோவை மண்டலம், 2வது இடத்தில் உள்ளது,'' என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் ரவிச்சந்திரன் கூறினார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு வருமான வரி இலக்காக, 1.08 லட்சம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இதுவரை, 42 சதவீதத்தை எட்டியுள்ளோம். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், வருமான வரி வளர்ச்சி, 32 சதவீதம் அதிகரித்துள்ளது; இதில், தமிழகம் இந்திய அளவில், 4வது இடத்தில் உள்ளது. கோவை மண்டலத்தின் வளர்ச்சி விகிதம், 28 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவை மண்டலம் உள்ளது. வரி செலுத்துவோருக்கான சேவையில், குறிப்பாக 'ரீபண்ட்' அளிப்பதில் மிகக் கவனமாக உள்ளோம். தமிழக அளவில், 43 சதவீதம் கூடுதலாக 'ரீபண்ட்' வழங்கியுள்ளோம். கோவையில் முந்தைய ஆண்டு, 700 கோடி ரூபாயாக இருந்த 'ரீபண்ட்', தற்போது, 140 சதவீதம் அதிகமாக, 1,800 கோடி வழங்கியுள்ளோம்.
வரி செலுத்துவோர், பிடித்தம் செய்வோருக்கு, 'கார்ப்பரேட் கனெக்ட்' என்ற திட்டத்தின் கீழ் போதிய வழிகாட்டுதல்களை வழங்குகிறோம். 'ரிட்டர்ன்' தாக்கல் செய்ய இ--பைலிங் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 3 மணி நேரத்துக்குள் 'ரீபண்ட்' வழங்கி சாதித்திருக்கிறோம். முதன்முறை வரி செலுத்துவோருக்கு, இணையதளத்திலேயே வழிகாட்ட 'டுடோரியல்' வசதி உள்ளது.
வருமான வரி விலக்குகளுக்காக அறக்கட்டளைகள் மறுபதிவு கட்டாயமாக்கப்பட்டது. கடந்த நவ., 25ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது; இன்னும் ஏராளமானோர் அவகாசம் கோரியுள்ளனர். அதுகுறித்து பரிசீலிக்கப்படுகிறது. பத்திரப்பதிவு முதல் வெளிநாட்டு பயணம் வரை, 60 வழிகளில் தகவல்களை திரட்டும் வசதி எங்களிடம் உள்ளது. இதன்மூலம் வரி ஏய்ப்பாளர்களை எளிதில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை மண்டல தலைமை கமிஷனர் பூபால்ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.