மதுரை : 'ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்க முடியாத பிரச்னைக்கு காரணமான ஒரு சாதாரண மென்பொருளை (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,) கூட சரி செய்ய முடியாமல் அரசு நிர்வாகம் உள்ளதா' என ஆசிரியர் அலுவலர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பள்ளிக் கல்வித்துறையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கல்வி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அல்லது இணைக்கப்பட்டு நிர்வாகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றொரு கல்வி மாவட்டத்தின் நிர்வாக எல்லைக்கு மாற்றப்பட்டனர்.
மாற்றம் செய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு அக்டோபர், நவம்பர் சம்பளம் இதுவரை வழங்க முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான மென்பொருளில் (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,) உரிய மாற்றம் செய்யப்படவில்லை. 'அதுதொடர்பான பணி நடக்கிறது' என்ற பதிலை மட்டுமே கல்வி அதிகாரிகள் இரண்டு மாதங்களாக தெரிவித்து வருகின்றனர்.
அக்டோபர் சம்பளம் கிடைக்காதவர்களுக்கு தற்போது நவம்பர் சம்பளம் பெறுவதிலும் சிக்கல் நீடித்துள்ளது.
இரண்டு மாதங்களாக அவர்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்படைந்துள்ளது.
இதுகுறித்து மதுரையில் இந்திய பள்ளி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாபு பிரேம்குமார், பட்டதாரி ஆசிரியர் கழகம் செயலாளர் முருகன், உதவிபெறும் பள்ளி அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் அருள் டெல்லஸ் ஆகியோர் கூறியதாவது:
சம்பள பிரச்னை தொடர்பாக ஆசிரியர், அலுவலர்கள் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. இரண்டு மாதங்களாக ஒரு மென்பொருளை கூட சரிசெய்ய முடியாத நிலையில் தமிழக அரசு நிர்வாகம் உள்ளதா.
எப்போது சரியாகும் என்பதை கூட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் தெரிவிக்க முடியாதது அரசின் அக்கறையின்மையும், அலட்சியத்தையும் காட்டுகிறது.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோல் பிரச்னைகள் நீடித்தால் சம்மந்தப்பட்ட மென்பொருள் நிறுவனத்தை கல்வித்துறை மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தமிழகத்தில் கடைசியாக ஆவடி மாநகராட்சி உதயமானது. அப்போது சில பகுதிகள் பிரிக்கப்பட்டு ஆவடி மாநகராட்சி எல்லைக்குள் இணைக்கப்பட்டன. இவ்வாறு இணைக்கும்போது அதிலுள்ள அரசு ஊழியர்களுக்கு ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மென்பொருள் நடைமுறையால் சம்பளப் பிரச்னை ஏற்படும் என கணித்த நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் முதல் மூன்று மாதங்களுக்கு தடையின்றி அவர்களுக்கு சம்பளம் வழங்க முன்கூட்டியே மாற்று நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கல்வித்துறை சீரமைப்பின் போது இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் கோட்டை விட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.