மதுரை : தமிழக அரசின் நீராய்வு நிறுவனம் தமிழகத்தில் உள்ள ஆறு, கண்மாய் நீராதாரங்களைப் பற்றிய புள்ளிவிபரங்களை 'கூகுள் எர்த்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறது.
நீர்வளத்துறை மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் உள்ள 7605 கண்மாய்களைப் பற்றிய விவர பதிவேடு 90 சதவீதம் முடிந்துள்ளதாக மண்டல தலைமை பொறியாளர் ஞானசேகரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மதுரை மண்டலத்தில் தாமிரபரணியாறு, கோதையாறு, கல்லாறு, நம்பியாறு, வைப்பாறு, குண்டாறு, வைகை, பாம்பாறு - கோட்டார் என 8 வடிநிலங்களின் கீழ் 7065 கண்மாய்கள் பராமரிக்கப்படுகின்றன. நீராய்வு நிறுவனம் மூலம் கண்மாய் பற்றிய பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மதுரை மண்டலத்தில் கூடுதலாக நிறைய தகவல்களை முதற்கட்டமாக பதிவேற்றி வருகிறோம்.
கண்மாய் வரைபடம், பரப்பளவு, பாசனத்திற்கான ஆயக்கட்டு அளவு, கண்மாய் மேற்கரை, கீழ்ப்பகுதி கரை, தொடர் பாசன கால்வாய்களின் வழித்தடம், தண்ணீர் செல்லும் பாதை அனைத்தையும் இணையதளத்தில் பார்க்கலாம்.
நீர்வளத்துறைக்கு உட்பட்ட கண்மாய், கைவிடப்பட்டது, பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்மாய்கள் பட்டியலிடப்படுகிறது. ஜியோ இன்பர்மேஷன் சிஸ்டம்' (ஜி.ஐ.எஸ்.) மூலம் உருவாக்கப்பட்ட இணையதளத்தில் கண்மாயின் வரலாறு, தண்ணீர் எவ்வளவு இருப்பு உள்ளது, கடந்த ஐந்தாண்டுகளில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன, எதிர்காலத்தில் நடக்க உள்ள வேலை பற்றிய அனைத்து தகவல்களும் இடம்பெறும்.
தற்போது 90 சதவீத பணிகள் முடிந்து மறுசரிபார்ப்பு பணி நடக்கிறது. 'கூகுள் எர்த்' செயலியை அலைபேசியில் பதிவேற்றம் செய்தால் உள்ளங்கையில் நீராதார விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்றார்.