கோவை: 'முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வில் நடந்த குளறுபடிகளை களைய வேண்டும்' என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் கூறியதாவது:
மாநில அரசு மருத்துவக் கல்லுாரி முதுநிலை படிப்பு கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், முதல் சுற்று முடிவில் விரும்பிய இடம் கிடைக்கவில்லை எனில், மாணவர்கள், இரண்டு, மூன்றாம் சுற்றுகளில் விரும்பிய 'சீட்' பெறுவர். இந்நிலையில், இரண்டாம் சுற்றில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் 'மாப்அப்' எனும் மூன்றாம் சுற்று கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, நடப்பாண்டு தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிந்த ஓரிரு நாட்களில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்,'இரண்டாம் சுற்றில் ஒதுக்கப்பட்ட கல்லுாரியில் சேராமல் இருப்பவர்கள் மூன்றாம் சுற்றில் பங்கேற்கலாம்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், இரண்டாம் சுற்றில் பங்கேற்று கல்லுாரிகளில் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டனர்.
ஒதுக்கப்பட்ட இடத்தில் சேராத மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், மூன்றாம் சுற்றில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆறு மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அவர்கள் மட்டும் மூன்றாம் சுற்றில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு 'மாப்அப்' கலந்தாய்வும் முடிந்துள்ளது.
இது கலந்தாய்வு நடைமுறைகளில் முறைகேடு, தவறுகள் நடந்துள்ளதை காட்டுகிறது. வழக்கு தொடராத, 1,000க்கும் மேற்பட்ட டாக்டர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
'மாப்அப்' மற்றும் 'ஸ்ட்ரே ரவுண்ட்' அவசர கதியில் நடத்தப்பட்டுள்ளது. இவை தேர்வுக்குழுவின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து, தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி கலந்தாய்வில் நடந்த குளறுபடிகளை களைய வேண்டும்; கலந்தாய்வுகளை தள்ளுபடி செய்து புதிதாக கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.