தஞ்சாவூர் : காமன்வெல்த் போட்டியில், தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கும், வெள்ளி வென்ற பயிற்சியாளருக்கும் பட்டுக்கோட்டையில் நேற்று, நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதில் ஒருவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ரவிச்சந்திரன், 52; மற்றொருவர் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே, கல்லுக்காரன்பட்டியை சேர்ந்த செல்வமுத்து மகள் லோகபிரியா, 22.
இவர், தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறார். காமன்வெல்த் போட்டியில், பெண்களுக்கான பளு துாக்கும் போட்டியில் லோகப் பிரியா, 52 கிலோ ஜூனியர் பிரிவில், 350 கிலோ துாக்கி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
மாஸ்டர் ஜிம் ரவி ஆண்களுக்கான போட்டியில், 93 கிலோ பிரிவில், 490 கிலோ துாக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
லோகபிரியா தங்கப்பதக்கம் வென்ற அதே நாளில், அவரது தந்தை செல்வமுத்து மாரடைப்பால் இறந்தார். தன் தந்தையின் இறப்புச் செய்தி கேட்ட, லோகபிரியா, நீண்ட நாள் கனவாக இருந்த தங்கப்பதக்கம் வென்ற மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல் மனம் உடைந்தார்.
இதற்கிடையே, தங்கம் வென்ற லோகபிரியா மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற மாஸ்டர் ரவிச்சந்திரன் இருவரும், பட்டுக்கோட்டைக்கு வந்தனர். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து, பொன்னாடை போர்த்தி மலர் துாவி வரவேற்பு அளித்தனர்.
தனக்கு கிடைத்த மரியாதையை பார்க்க, தந்தை இல்லையே, என லோகபிரியா கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து, அவரது நண்பர்கள் உள்ளிட்ட பலரும், நாங்கள் உனக்கு தந்தையாக இருப்போம் என ஆறுதல் கூறினர்.